ஞாயிறு, 9 மார்ச், 2014

தேவகிருபை

நகரத்தைத் தாண்டி நதிக்கரையில் அந்தச சிறிய கோயில் இருந்தது. பிரகாரச் சுவர்கள் நாலாப்புறமும் உயரவுயரமாக இருந்தன. வலது சுவரையொட்டிச் செல்கிற அந்தச் சாலை மரங்களடர்ந்த புதருக்குள் ஒளிந்துகொள்கிறது. சாலையின் மறுபக்கம் சில பெஞ்சுகள் போடப்பட்டிருக்கின்றன. அந்தி மசங்கும் நேரத்தில் கோயிலுக்கு வரும் மக்கள் பெஞ்சுகளை நிரப்பிவிடுவார்கள். பெஞ்சுகளையொட்டி இரண்டு மரங்கள் இருந்தன. அதற்கும் சற்றுத் தள்ளி கருவேலம் புதர்.
அந்த மரங்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய உருவம் கொண்டு அடர்ந்திருக்கவில்லை. இருவர் மட்டுமே உட்கார்ந்துகொள்ளும் அளவிற்கு சிக்கனமாக நிழல் தந்தன அவை. அந்த மரத்தடியில் தான் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். இருவரும் தம்முன் அலுமினியத் தட்டு வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே ஆளுக்கொரு இரும்பு வாளி இருக்கும். இருவரும் இடுப்பில் கந்தலாய் வேட்டியைச் சுற்றியிருப்பார்கள். இருவருக்கும் உருவத்தில் நிறையவே வித்தியாசமுண்டு. தன்னா எலும்புந் தோலுமாக, கலைந்த தலைமுடியோடு இருப்பான். அவனது அம்மைத் தழும்புகளால் விகாரமாக இருக்கும். ஏதோ விசித்திர நோயால் பீடிக்கப்பட்டு அவனது உடல் முழுக்க சிவந்த கொப்பளங்களும், காயங்களுமாக இருக்கும். கழுத்து, வயிறு, உள்ளங்கால்வரையிலும் சீழ்வடியும் காயங்களும், இரத்தம் வடியும் கொப்பளங்களுமாய் பார்க்கவே அறுவெறுப்பாயிருக்கும் அவனது தோற்றம். ஆனால், பக்தியோடு கோயிலுக்கு வருபவர்களுக்கு அவனது தோற்றம் அறுவெறுப்புக்கு பதிலாக பரிதாபத்தையே உண்டாக்கியது. அந்த பரிதாபம் அவனது அலுமினியத் தட்டில் சில்லறைகளாக மாறியது.
ஆனால், பிர்ஜீவின் நிலைமையோ வேறு. பார்க்க கொழுகொழுவென்று இருந்தான். வேட்டிக்கு மேல் கட்டுக்கோப்பான உடம்பு; உப்பிய கன்னங்கள். அவனது தோற்றம் பரிதாபத்தை உண்டாக்கக் கூடியதாக இல்லை. ஆனாலும், தன்னாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதால் பிர்ஜீவிற்கும் ஏதாவது கிடைக்கும். காயமும், தழும்புகளும் கொண்ட கோரமான உடம்புக்குத்தான் இங்கே மதிப்பு. தன்னாவின் தட்டை விட பிர்ஜூவின் தட்டு குறைவான வருமானத்தையே பெற்றுத்தருகிறது. சொல்லப்போனால் பிர்ஜூவின் தட்டு பெரும்பாலும் உதாசீனங்களால் தான் நிறைகிறது. பிர்ஜீவின் உடம்பில் எந்தக் காயங்களும், தழும்புகளும் இல்லாதது தான் இதற்குக் காரணம் போல.
தன்னாவைப் பார்த்து யாரும் பரிதாபப்படாமல் இருக்க முடியாது. அதிலும் பெண்கள் தன்னாவைப் பார்த்துவிட்டால் உருகிப் போய்விடுகிறார்கள். ஆனால் தன்னாவின் வாழ்க்கை நிலையோ முற்றிலும் வேறானது. காயங்களையும், கொப்பளங்களையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தன்னாவின் வாழ்க்கை செழிப்பு மிக்கதாகவே உள்ளது. போதுமான அளவுக்கு தன்னாவுக்கு உணவு கிடைத்துவிடுகிறது. அது மட்டுமா? அவனது அலுமினியத்தட்டு அவனுக்கு மது குடிக்கவும், கஞ்சா குடிக்கவும் தேவையான வருமானத்தையும் பெற்றுவிடுகிறது. பிர்ஜூவின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. பல நேரங்களில் பட்டினி தான்.
இந்த இரண்டு பிச்சைக்கார்களின் உலகமும் மிகவும் சிறியது தான், எனினும் அவர்களது தொழிலில் போட்டி உருவாகிவிட்டது. அது நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவிட்டது. தன்னாவின் சீழ்வடியும் காயங்களும், கொப்பளங்களும் அவனுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. ஒரு நடிகை தனது அழகை எண்ணி கர்வம் கொள்வதுபோல, தன்னா தழும்புகளும், காயங்களும் கொண்ட தனது உடலை நினைத்துக் கர்வம் கொண்டிருந்தான். தன்னாவின் உடம்பிலிருக்கும் கொப்பளங்களை நினைக்கும்போதெல்லாம் பிர்ஜூவுக்கு பொறாமை பொங்கி வழிந்தது. அழகே இல்லாத யுவதியொருத்தி, அழகு தேவதை ஒருத்தியைக் கண்டு வெறுப்பது போல பிர்ஜூவுக்கு தன்னாவின் உடம்பின் மீது வெறுப்பு குடி கொண்டுவிட்டது.
நாளுக்கு நாள் இந்த வெறுப்பு பிர்ஜூவைப் பாடாய்ப்படுத்தியது. தன்னாவின் அலுமினியத்தட்டில் விழும் ஒவ்வொரு நாணயமும், பிர்ஜூவின் மேல் ஈட்டியாய் இறங்கியது. நாணயம் விழும் சத்தம் ஒவ்வொன்றும் பிர்ஜூவின் இதயத்தை குண்டு விழுந்ததைப் போல உலுக்கியது.
எப்படியாவது தன்னாவை விட அதிகமாக பிச்சையெடுத்து வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்ற பேராசையில், கோயிலுக்கு வருபவரின் மனத்தைக் கரைக்கும்படி வலியால் துடிப்பது போல நடிப்பது… என பலவிதத்திலும் முயற்சிகள் செய்துவிட்டான் பிர்ஜூ. ஆனாலும் தன்னாவின் தழும்புகளுக்கு முன் பிர்ஜூவின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரானது.
தன்னாவின் மேல் இவ்வளவு வெறுப்பும், பொறாமையும் பிர்ஜூவுக்கு உண்டாக, தன்னாவும் தான் காரணம். தன்னா கறியும் சோறும் சாப்பிடும்போது, பிர்ஜூ காய்ந்த ரொட்டித் துண்டை அதக்கிக் கொண்டிருப்பான். ரெண்டு கறித்துண்டுகளை பிர்ஜூவுக்குத் தரலாமெனவும் தன்னா எண்ணியதில்லை. அவன் ஒருவனே தான் சாப்பிடுவான். மது அருந்தும்போதும் அப்படித் தான். ஒரு மிடறு கூட தர மாட்டான். மதுவின் வாடையோ பிர்ஜீவை சுண்டி இழுக்கும். தன்னா இப்படி சுயநலமா இருப்பதால் தான் பிர்ஜூவின் மனசில் இவ்வளவு வெறுப்பும், பொறாமையும்.
பிர்ஜூ சில நேரங்களில் யோசிப்பதுண்டு. தன்னாவின் இந்த நோய் எவ்வளவு காலம் நீடித்துவிடப் போகிறது? இந்தக் கொப்பளங்களும், காயங்களும் நிலையானதா என்ன? என்றாவது ஒருநாள் இந்த நோய் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்? பிர்ஜீ தன்னாவிடம் இந்த நோய் பற்றி பலமுறை விசாரித்திருக்கிறான். அப்போதெல்லாம் , தனக்கு உடம்பில் எவ்விதமான வலியோ, வேதனையோ கிடையாது என்றே தன்னா கூறுவான். இது ஒருவிதமான தொற்று நோய். தொட்டால் ஒட்டிக்கொள்ளும். கோயிலைச் சுற்றி வீடுகள் எதுவும் இல்லாததால் இந்த நோய் பரவும் அபாயம் இல்லை என்பான் தன்னா. வாழ்நாள் முழுவதும் இந்த நோயோடுதான் தன்னா இருப்பான் என்பதை நினைக்கும்போது பிர்ஜூவுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. வேறு இடத்திற்குப் போய் விடலாமா என்றுகூட பிர்ஜீ யோசித்தான். நகரத்தைத் தாண்டி இருப்பதால் தான் இங்கே பிச்சைக்காரர்கள் கூட்டம் மொய்ப்பதில்லை. வேறு இடங்களில் போட்டி அதிகமாக இருக்கும். இங்கே தன்னாவைத் தவிர போட்டிக்கு யாருமில்லை. அதனால், வேறு இடம் தேடும் முடிவைக் கைவிட்டான்.
ஒருநாள் இரவு முழுதும் பிர்ஜீக்கு தூக்கமே வரவில்லை. எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்ததில் விடிந்தேவிட்டது. அந்த விடியல் பிர்ஜூவுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுப்பதாக இருந்தது. இன்னமும் தன்னா தூங்கிக்கொண்டிருந்தான. சுள்ளிகள் எரித்து தேநீர் தயாரித்தான் பிர்ஜூ. தன்னா எழுந்ததும் தேநீர் டம்ளரை அவனிடம் நீட்டினான். தன்னாவுக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எதுவும் பேசாமல் தேநீர் அருந்தினான் தன்னா. அன்றிலிருந்து பிர்ஜூ தன்னாவிடம் நெருங்கிப் பழகத் தொடங்கினான். அவனோடு சேர்ந்தே சாப்பிட்டான். இரவிலும் வெகு நேரம் வரை தன்னாவோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு தன்னாவின் கம்பளி விரிப்பிலேயே உறங்கிவிடுவான். “ அடடே, உன் காயத்திலிருந்து இரத்தம் வருது பார். கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்துவிடுகிறேன் வா” என்று தன்னாவுக்கு பணிவிடைகளும் செய்தான்.
”வேண்டாம் பிர்ஜீ..இது தொற்று வியாதி. உனக்கும் ஒட்டிக்கொள்ளும்” என்று தன்னா மறுத்தாலும், பிர்ஜீ காயங்களைச் சுத்தம் செய்து எண்ணெய் வைத்துவிடுவான். கொஞ்சமும் தயங்காமல் காயங்கள் துடைத்த தன் கைகளைத் தனது வேட்டியிலேயே துடைத்துக்கொள்வான்..
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் பிர்ஜீ பழகுவதை தன்னாவால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இனி சாப்பிடும்போது பிர்ஜூவுக்கும் கொடுத்துவிட்டுச் சாப்பிடுவது என நினைத்தான் தன்னா. ஆனாலும், நினைத்ததோடு சரி.. பிர்ஜூவோ எவ்வித மாற்றமுமில்லாமல் சகஜமாகவே தன்னாவுடன் பழகினான்.
ஒருநாள் காலை தூங்கியெழுந்த பிர்ஜூவின் பாதங்களில் ஏதோ ஊர்வதுபோல இருந்தது. பூச்சி புழு ஏதேனும் ஊர்கிறதா என தடாலென எழுந்து வேட்டியை உதறிப் பார்த்தான். எதுவும் தட்டுப்படவில்லை. ஆனால், அவனது இடுப்பில் சின்னச் சின்னதாய் சிவந்த கொப்பளங்கள் தென்பட்டன. உடனே அவன் தன்னாவை எழுப்பினான். எழுந்து உட்கார்ந்த தன்னா அந்தக் கொப்பளங்களைப் பார்த்ததும்,” சொன்னேனே கேட்டியா? உனக்கும் வந்துவிட்டது இந்த வியாதி. என் கிட்ட வராதேன்னு எத்தனை முறை சொன்னேன்? என் காயங்களைத் தொடாதேன்னு சொன்னேன்…கேட்டியா நீ? இப்ப பாரு…..” என்று கத்தினான் தன்னா.
“ உனக்கும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்ததா தன்னா?” என்று கேட்டான் பிர்ஜீ.
அந்தக் கொப்பளங்களைக் கூர்ந்து பார்த்த தன்னா,” ஆமாம்… இதே மாதிரிதான் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தது” என்றான் தன்னா.
பிர்ஜூ எதுவும் பேசவில்லை. அமைதியாக எழுந்து கோயிலை நோக்கி நடந்தான். கோயிலுக்குள் சென்று தன் வேட்டி முனையில் முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தை கடவுள் சிலைக்கு முன் வைத்துவிட்டு கைகள் கூப்பி, தளுதளுத்த குரலில்,” கடவுளே, என் மேல் இரக்கம் காட்டியதற்கு நன்றி. என் வேண்டுகோளை ஏற்று எனக்கும் இந்த வியாதியைக் கொடுத்து என் மேல் கிருபை காட்டிவிட்டாய் கடவுளே. இன்னும் சில நாள்களில் என் உடம்பும், தன்னாவின் உடம்பைப் போல் ஆகிவிடும். கோயிலுக்கு வருவோர் இனி என்னைக் கண்டும் பரிதாபப் படுவார்கள். என் அலுமினியத் தட்டும் இனி நிறையும்…….” மேற்கொண்டு பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது பிர்ஜீவுக்கு. பிர்ஜூ ரொம்பவும் சந்தோசமாக இருந்தான்

கருத்துகள் இல்லை: