ஞாயிறு, 9 மார்ச், 2014

 ஓடும் பிள்ளை 1

சூரியன் ஓய்ந்துபோன பின் அந்தியில் வீட்டுத்திண்ணையில் வந்தமர்ந்தார் ஓடும் பிள்ளை. வேலை முடிந்துவிட்டதா என்று கேட்டேன். இனிமேல் தான் தொடங்கப் போகிறேன் என்றபடி தலைசாய்த்து உறங்கிப்போனார். நிலா பூத்து வெளிச்சத்தை வாசனையாகப் பரப்பத் தொடங்கியது

ஓடும் பிள்ளை புங்கை மரத்தடியில் அமர்ந்திருந்தார். சுள்ளெறும்புகள் அவரது உடலெங்கும் ஊர்ந்து கொண்டிருந்தன. எறும்புகள் உங்களைக் கடிக்கவில்லையா என்றேன். கடிக்கிறது என்றார். வலிக்கவில்லையா என்றேன். வலிக்கவில்லை என்றார். ஒரு புங்கையிலை அவரது தலை மேல் விழுந்தது

 அலர்மேல்மங்கைபுரத்தின் கோயிலுக்கருகில் நான்கைந்து கை அரிசிப்பொரி, கேரட் பீட்ரூட் தூவல், மிளகாய்த் துவையல் ஒரு ஸ்பூன், வறுத்த கடலை ஒரு கைப்பிடி, நல்லெண்ணை ஒரு ஸ்பூன் யாவற்றையும் ஒரு பாத்திரத்தில் இட்டுக் கலக்கி மசாலாப் பொரி விற்பவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் ஓடும் பிள்ளை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என எல்லா மொழியும் பேசி விற்பனையை ஜோராக நடத்திக்கொண்டிருந்தான் அவன். நானும் மசாலாப் பொரி விற்கப்போகிறேன் என்றார் ஓடும் பிள்ளை திடீரென. ஏன் என்றேன். பல மொழிகள் கற்கும் ஆவல் பிறந்திருக்கிறது எனக்கு என்று சொல்லிவிட்டு மௌனப் பெருவெளியில் நீந்தத் தொடங்கினார் ஓடும் பிள்ளை

கருத்துகள் இல்லை: