திங்கள், 25 ஜூன், 2012

வளையலோசை


வளையலோசை

மார்கழி அதிகாலையில்
ஆவி பறக்கும் தேநீராய்
உனது கோப்பையில் நிரம்புகிறது அது

கலைந்து கிடக்கும்
உனது புத்தகக் குவியலை
அடுக்கி வைத்து
ஞாயிற்றுக்கிழமையைச்
சபித்துக் கொண்டிருக்கிறது அது

ருசித்துப் பழகிய
உனது நா சுவைத்து மகிழ
சமையற் குறிப்புகளை மேய்கிறது அது

துடித்தடங்கும்
உனது இச்சையைத்
தாலாட்டி உறங்க வைக்க
படுக்கை விரிக்கிறது அது

அன்பு, அக்கறை, காதல் என
வெவ்வேறு பெயர்களில்
நீ வீசும் வலைகளில்
சிக்கிக் கொள்ளத் துடிக்கிறது அது

ஹைகூ

இந்த மழைக்கு
தேடியெடுத்த குடையை
விரிக்க சிரமமாயிருக்கிறது

இசை

கடைசியில் புல்லாங்குழலுக்குள்
ஒளிந்துகொண்டாய்

என் மூச்சுக்காற்றனுப்பித்
தேடுகிறேன்

பொத்திப் பொத்தி விளையாடும்
என் விரல்களை மீறி
ஏழு துளைகளிலும்
தப்பிச் செல்கிறாய்

கண்ணாமூச்சியாட்டம்
தொடர்கிறது இன்னும்

பாழ்

எப்போதாவது
ஒற்றடைக்குச்சியை
கையில் திணித்து
அப்பாவை நிமிரச்செய்யும்
அம்மா
எப்போதும் குனிந்தேயிருக்கிறாள்
விளக்குமாற்றோடு

ஞாயிறு, 24 ஜூன், 2012

ஹைகூ

சாலைச் சிறுபள்ளம்
மழைக் கருணையில் ஓய்வெடுக்க
வீழ்ந்த மின்கம்பம்

மழை

கடும் வெக்கைக்குப் பின்
பொழிந்தாய்

இப்போது
என் எல்லா இலைகளிலும்
உன் துளிகள்

இராக்கனவு

உன் கை தவறி
விழுந்து நொறுங்கிய கண்ணாடி
என் இரவு

சிதறிய நட்சத்திரத் துண்டுகள்
ஒவ்வொன்றிலும்
உன் முகம்

இருள் குடித்துக்கொண்டிருக்கிறேன்
நான்

நானும்தான்

அவர்கள்
அப்படிப்பட்டவர்கள் தான்
அதனால்தான்
அவர்கள் அப்படிப்பட்டவர்கள்
அப்படிப்பட்டவர்களாய் இருக்க
அப்படித்தான்
இருக்க வேண்டுமென்ற
கட்டாயமில்லை
அப்படி இல்லாதவர்களும்
அப்படிப்பட்டவர்களாகவே
இருக்கிறார்கள்
நான் சந்திக்கும் எல்லோரும்
அப்படிப்பட்டவர்களே
அப்படிப்பட்டவன்தான்
நானும்.

உதிர்காலம்

உன் கைக்கு அகப்பட்டதிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சமாகிறேன்

எனக்குள் ஒளிந்திருக்கும் இரவை
உருட்டி உருட்டி
உமிழ வைக்கிறாய்

உன் கனவில் நெளியும் கோடுகளுக்கும், புள்ளிகளுக்குமாய்
கூர் தீட்டித் தீட்டி
எனக்கு முள் கிரீடம் சூட்டுகிறாய்

உன் காலடியில்
சுருள்சுருளாய் சுருண்டு விழுகிறது
என் காலம்

உன் கத்தி முனைக்கு எட்டாதபடி
உயரம் சிறுத்திருக்கிறேன்
இப்போது

உயிர் முளைத்து
ஓவியங்கள் நடனமாடும்
உன் உலகத்தைப் படைத்த களைப்பில்
உறங்கிக்கொண்டிருக்கிறாய் நீ

மர்மத்தின் உதடுகள்

உரசிய தீக்குச்சியின்
வெளிச்சத்தில் தேடுகிறேன்
இருளில் கிடக்கும்
உனது விளக்கை

எண்ணெயும் திரியும்
இருக்கின்றனவா
உனதந்த புன்னகையில்

மாடனென்பேன் என்னை

முகம் சிதைந்த மாடனின் புருவங்களுக்கு நடுவில்
கொழுந்து விட்டெரியும் பிணத்தீயில்
பீடி பற்ற வைக்கும் முனைப்பில்
என் நகரும் வேர்கள்
முன்னெப்போதுமில்லா வேகத்தில்
சுழன்று வருகின்றன

சுரக்கும் மழையை சொட்டிக்கொண்டிருக்கும்
அவனது புறந்தள்ளிய நாக்குகளை
அறுத்தெரிய
நகங்களைக்
கூர்தீட்டிக் கொள்கிறேன்

மல்லாந்து செத்தவனின் முகத்தில் புதைந்திருக்கும்
இரண்டு வானத்தை
உருட்டிப் பிசைந்து மிரட்டும் அவனை
ஜன்னல் கிராதியில்
முகம் பொத்தி ரசிக்கிறேன்

முற்றிய சாதிச் சண்டைநாளில்
வெடித்துச் சிதறிய அந்தியை
கன்னங்களில் பூசிக்கொண்டிருக்கும்
மாடனின் புருவ வில்லைப் பிடுங்கியெடுத்து
அம்பு பொருத்துகிறேன்

என் முகத்தில் முளைத்த
கோரப் பற்களின் கூர் முனையில்
எழுதுகிறேன் என் பெயரை
மாடனென்று

தரையிறங்கிய விண்மீன்கள்

சலனமற்றிருக்கிறது
உன் குளம்

பொறுக்கியெறிய
கற்களேதுமில்லை
இப்போதென்னிடம்

என்ன செய்யலாம்
உன் குளத்தை
என்ற சலனம்
கையில் கிடைக்கிறது

எப்படி வீசலாமென்ற
மற்றொரு சலனத்தை
விரல்களில் பற்றுகிறேன்

திசையைத் தீர்மானிக்கும்
மற்றுமொரு சலனத்தைக் கொண்டு
வீசுகிறேன்
முதல் சலனத்தை

இப்போதும்
சலனமற்றிருக்கிறது
உன் குளம்

யாரும் ஏற முடியாத ரயில் பெட்டி

உறக்கத்தினூடே பேசவும்
பேச்சினூடே கூவவும்
கூவுவதனூடே
வெண்டை விரல்களில்
பயண வட்டமொன்றையும்
வரைகிறாள் ஓவியா

கைத்தட்டல்கள் விழுந்துகிடக்கும்
இவ்வறையில்
பெட்டி பெட்டியாய் அடுக்கி வைத்த
அவளுலகம்
ஒரு பேட்டரி செல்லின் மின் கீற்றில்
சுற்றிச்சுழன்று படுத்துகிடக்கிறது

கனவெங்கும் தடதடக்கும் என் பிரியங்களை
அவள் அணைத்து முத்தமிடும் சத்தம்
இரவின் காலடியில்
விண்மீன்களாய் உதிர்ந்து
காணாமலாகின்றன

இவ்விரவின் நீண்ட தூரத்தை கடக்கவியலாமல்
கைக்கடக்கமான பெட்டிக்குள்
தனித்தனியாய் கழற்றிவைக்கப்பட்டு
ஓய்ந்துகிடக்கின்றன
ஓவியாவின்
ரயில் பெட்டிகளும்
தண்டவாளத்துண்டங்களும்

உதட்டுச் சுழல்

ஒரு கருவறை
மலையாக உருமாறியபோது
ஊற்றெடுத்து கிளம்பியது
உன் நதி

வழித்தடமெங்கும் விரிந்து பரவிய
வனாந்தரங்களில்
குதித்துக் களித்த மருட்சியில்
உன் கரையில்
கடைசியாக
கால் நனைக்க வந்தவன் நான்

தாகத்தை சாகடிக்க
அள்ளிக் குவித்த என் கைகளிலிருந்து
சொட்டுகிற முத்தங்கள்
நீச்சல் வீரனாக்குகிறதென்னை

இனி
திரும்பலாம்
திரும்பாமலும் போகலாம்
உன் உதட்டுச் சுழலுக்குள்
சிக்கப்போகும் நான்

நேற்று

மறுபடியும்
பிறக்க முடியாதெனத்
தெரிந்த பின்னும்
செத்துப்போவானேன்

நேற்றிரவு இருபத்திமூன்று மணிக்கு

இஃதொன்றும் புதிதில்லை
இருபத்தி மூன்றாம் முறையாக
உன்னைவிட்டு நான்
பிரிந்தேன்

நேற்றிரவு
உரையாடிய சொற்களை
அந்தச் சோடியம் விளக்கின்
மஞ்சள் வெளிச்சத்தில் விட்டுவிட்டு
எதிரெதிர் திசைகளில்
விலகின
நம் நிழல்கள்

யாரிடமாவது
சொல்லியிருப்பாய் நீயும்

அஃதொன்றும் புதிதில்லை
இருபத்தி மூன்றாம் முறையாக
நான் உன்னைச்
சந்தித்தேனென

பலிபீடம்


உனக்கொரு கத்தியைப் பரிசளிக்கிறேன்

உன் வீட்டுக்கொல்லையில்
கோடையின் நகங்களில் பூத்துக் காய்த்துக் குலுங்கும்
மாமரத்தின் கிளிமூக்குகளைத்
துண்டாக்கிக்கொள்ள உதவுமது

படையலிடும் ஊதுபத்திப் பொழுதுகளில்
கறை கலக்காத வெண்சிரிப்பைப் பிளந்துகாட்டும்
நெத்துத் தேங்காயை உடைக்கத்
தோதாயிருக்குமது

கொலை செய்யும் பக்குவமேற்பட்ட பின்
மறந்துவிடாதே
உன் அலைபேசிக்குள் பதுங்கியிருக்கும்
என் பத்திலக்க எண்களை

ஓவியா அல்லது வனதேவதை

கடந்த பத்து நாட்களாக
வீடெங்கும் விரவிக்கிடந்த
ஓவியா இல்லாத
அந்த வெறுமையை எட்டி உதைக்க
வந்து சேர்ந்தாள்
மறுபடியும் அவளே

நட்டிருந்த கொய்யாச் செடியைக் காட்டி
என்ன செடியென்றேன்
அவளிடம்

மீன் செடியென்று சொன்னாள்

மாம்பழத்தைக் காட்டிக் கேட்டபோது
மீன்பழம் என்றாள்

அவள் விரும்பிச் சாப்பிடும்
கெழுத்தியின் மீசைமுடியை
ஞாபகமூட்டி
கிளப்பினாள் என்னை
மீன்கடை நோக்கி

மீசையொன்றை வைத்துக்கொள்ளும் ஆசையால்
அவதிப்பட்டு வந்த அவள்
சப்பாத்திக்குப் பிசைந்த மாவில்
மூக்குக்குக் கீழே ஒட்டிக்கொண்டாள்
கோதுமை மீசையை

நாய் கதை, பூனை கதை, கிளி கதை
கேட்டுக்கேட்டுச் சலித்துப் போன அவள்
செடி கதை, இலை கதை, மாமா கதை,
டிவி கதை, தெரு கதை, கதவுக் கதை,கண் கதை, கை கதை,
போர்வைக் கதை, சைக்கிள் கதை, பந்து கதை
என புதுப்புதுக் கதைகளைச்
சொல்லச் சொல்லி
உறங்காமலும், உறங்க விடாமலும் ஆக்கினாள்
அவ்விரவை

இப்போது
படிமங்கள் பூத்துக்குலுங்கும்
வனதேவதை உலவுகிறாள்
எனது வீட்டில்

இருள்

இருள்
தயவுசெய்து
மண்டையை உடைத்துக்கொண்டு
தேடாதே

அப்படியொன்றும்
இருக்கப்போவதில்லை

இந்தக் கவிதையில்
சருகு
சொல்லிக்கொள்ள எதுவுமில்லை
ஒரு கூடாரம் தான்
நான்
சாலச் சிறந்தது எதுவெனில்
எனக்குள் இருக்கும்
உன்னைக் கொல்வதைவிட
உனக்குள் இல்லாத
என்னைக் கொல்வதுதான்