திங்கள், 10 மார்ச், 2014

படரும் வெளி

கொடியெனப் படர்ந்திருக்கும்
தனிமையின் இலைகளில்
எறும்புகள் ஊர்வது
அதிசயமில்லை
 
பற்றிக்கொள்ள
என்னைத் தவிர எதுவுமில்லை
என்றான பின்
பின்னிப் பிணைத்துக்கொள்ளும் பேரன்பு
சுரந்து வழிகிறது பகல் முழுதும்
இரவிலும் கூட....

விரிந்த கிளைகளில்
மலர்ந்த கூடுகளில்
குஞ்சுகளின் கிசுகிசுப்புகளும்
அந்தியில் பறவைகளின்
கீச்சொலிகளும்
வானத்தைக் குளிப்பாட்டுகின்றன

நகர்தலை சாத்தியமற்றதாக்கிவிட்ட
வேர்கள்
நகர்தல் அர்த்தமற்றதெனவும்
சொல்லிக் கொண்டிருக்கின்றன




உன் முத்தமானாலும்
அது உனக்கீடானதில்லை
என்பதான
ஒரு மழைத்துளி
உன் கடைசி நேர
கையசைப்பிலிருந்து
பொழிந்தபடியிருக்கிறது

ஞாயிறு, 9 மார்ச், 2014

அஃதில்லை அது

()()()()() அஃதில்லை அது ()()()()()

ஒரு ஞாபகம்
ஏழு வண்ணங்களோடு
வளைந்திருந்தது

ஒரு ஞாபகம்
சின்னச் சின்னத் துளிகளாகப்
பொழிந்தது

ஒரு ஞாபகம்
வயற்காட்டுக் குருவிகளை
பயமுறுத்தியது

ஒரு ஞாபகம்
வெறி பிடித்துக்
கடிக்கத் துரத்தியது

ஒரு ஞாபகம்
நடுநிசியில்
பாத்திரங்களை உருட்டியது

ஒரு ஞாபகம்
புல் நுனியில்
உட்கார்ந்திருந்தது

ஒரு ஞாபகம்
தவளையின் கூக்குரலுக்கு
வளைந்து வளைந்து ஊர்ந்து சென்றது

ஒரு ஞாபகம்
உதிரும் சருகிலைக்கு
இறுதி வணக்கம் செலுத்தியது

ஒரு ஞாபகம்
ஞாபகத்தின் ஊரிலிருந்து
வெளியேறியது

குளிரின் மரணம்

()()()()() குளிரின் மரணம் ()()()()()

ஏ.ஸி ரிப்பேர் செய்பவனாக
இன்றைய நாளை
வாழ்ந்து முடித்துவிட்டேன்

குளிர், மழை, பனி பற்றிய
எந்தப் பேச்சும்
இன்றெனக்கு
பெரும் வெக்கையாக இருந்தது

தர்பூசணிப் பழங்கள் அறுத்து
துண்டாடிச் சிவந்த
பகலைக் கண்டு
வெட்கிப்போனேன்

வீதியில் மணியெழுப்பிப் போன
ஐஸ்காரன்
கொல்லப்படாமல்
என்னிடமிருந்து தப்பிப் போனான்

நீ நெருக்கித் தைத்துக் கொடுத்த
ஸ்வெட்டருக்குள்
ஒளிந்திருந்த காதலை
அணிந்துகொள்ள
முடியாமலாயிற்று

குடை விரிக்கும் பதைபதைப்பென
எதுவுமில்லாததையெண்ணி
மிகவும் பதைபதைத்துப் போனேன்

அவ்வளவு எளிதாக
தேநீர் மறுத்து
வியப்பிலாழ்ந்தேன்
என்னை நானே

நெற்றி வழிந்த வியர்வையை
விரல் வழித்து
சுண்டிவிட்டபோது
சில்லிட்டிருந்தது
அந்த அறை

பைன் ஆப்பிள் என்னும் அவன்

)()()()() பைன் ஆப்பிள் எனும் அவன் ()()()()()

நீங்கள் அவனுக்கு
பைன் ஆப்பிள் எனப் பெயர் சூட்டி
பைனாப்பிள் என விளித்ததும்
பைன் ஆப்பிள் ஆகி விடுகிறான் அவன்

உங்களின் குரல் திசை வழியில் நடந்து
உங்களை வந்தடையும் போது
அவன்
அழுகிப்போவதிலிருந்து
தப்பித்துக் கொள்கிறான்

காற்றின் பெருவெளியில்
அதிகாரத்தின் கூர்மை பூசிய
ஒரு சொல்லைக் கொண்டு
அவனது சொரசொரப்பான மேல்த்தோலைச்
சீவி விடுகிறீர்கள் நீங்கள்

இப்போது
மஞ்சள் நிறச் சாம்பலாக
இருக்கும் அவன்
உண்ணத் தகுந்தவனாகிறான்
உங்களுக்கு

வட்டமாக அல்லது நெட்டையாக
உங்கள் விருப்பப்படி
அவனைக்
கூறு போட்டுக் கொள்கிறீர்கள்

துண்டுகளாகிவிட்ட
அவன் மேல்
மிளகாய்ப் பொடியைத் தடவும்போது
உங்கள் நாவில்
எச்சில் சுரப்பதைத் தடுக்கவே முடியாது

சாறு வழிய
அவனைத் தின்று தீர்த்தபடி
உங்கள் பயணத்தைத் தொடர்கிறீர்கள்

நீங்கள் நுகராதபோதும்
கழுவிக்கொண்ட
உங்கள் கைகளிலிருந்து
வாசனையாய்க் கசிந்துகொண்டிருக்கிறான்
பைன் ஆப்பிள் என்னும் அவன்
()()()()() பிதுக்கப்படாத பற்பசை ()()()()()

என்
ஜன்னல் கிராதியில்
நீ மறந்து வைத்துவிட்டுப்போன
நினைவொன்று உட்கார்ந்திருக்கிறது

ஆயிமாயிரமாய் முளைத்திருக்கிற
அதன் பற்கள் யாவும்
பாதிக்குமேல் தேய்ந்து போயிருக்கின்றன

இவ்வளவு நாளாக அது
உன் அழுக்குகளைக் கொப்பளித்துத் துப்ப
பேருதவியாக இருந்திருக்கக் கூடும்

மறுபடியும் நீ அழுக்கேறியதை
உணர்ந்த கணத்தில்
நினைவுக்குத் திரும்பி
உனதறைகளில் தேடியிருப்பாய்
இந்த நினைவை

ஒரு குறுஞ்செய்தியில் நான்
உனக்கு உறுதிபடுத்திவிட்டேன்
இந்த நினைவைப்பற்றியும்,
அது என் ஜன்னல் கிராதியில்
உட்கார்ந்திருக்கும் அழகுபற்றியும்..

மறுமுறை நீ
வரும்வரை அழுக்குகளின் கனவின்
பசித்திருக்கும் அதை
பத்திரப்படுத்தி வைக்கும்
பெரும் பொறுப்பில்
அழுக்காகிக் கொண்டிருக்கிறேன்
இப்போது நான்

பிப்  22 2014

சருகுகளின் மலை

()()()()() சருகுகளின் மலை ()()()()()

சென்ற முறை
உனக்குள் நான் பயணப்பட்டபோது
இவ்வளவு சருகுகள் இருக்கவில்லை

உனக்கென கருகொண்டு
என் தோளுரசி கொஞ்சிப் போன
மேகத்தின்
வெவ்வேறு முகங்களில்
ஒன்று கூட தென்படவில்லை
இப்போது

சோம்பல் மிகுதியில்
இணையின் தலை கோதி
கூடிக் களித்த மந்திகள்
உன் பிளந்த நிலத்தில்
ஒரு சோற்றுப் பொட்டலத்திற்காய்
ஓடிக்கொண்டிருக்கின்றன

கூடுகள் தெரியுமளவிற்கு
வற்றிப்போன வேங்கை மரத்தின்
அடிவேரில்
என் இளைப்பாறுதல்
தாகத்தின் நிழலற்று பரிதவிக்கிறது

ஒலிகளால் உன்னை நிரப்பிய பறவைகளின்
மெல்லிறகுகள்
காற்று வெளியில் பறந்து திரிவதைக் கண்ணுற்று
சர்க்கஸ் கூடார கைத்தட்டல்களைச் சிந்துகிற
வெடித்த மனம் வாய்க்கவில்லை
எனக்கின்னும்

கீழிருந்து கொண்டுவந்த
தண்ணீர் பாட்டிலின் மூடி திறந்து
மேலிருக்கும் உன் பூமியில் கொட்டும்போது
உண்டாகும் இவ்வோசையைக் கேட்டு
ஏமாந்துவிடாதே

இது மழையில்லை

காதல்

இந்த வெளிச்சம் 
உன் மீதான காதலை
நிறைவேறாத அன்பை
தெளிவான நேசத்தை
சின்னஞ்சிறு பிரியத்தை
எங்கும் பரவிய 
இருளென காட்சிப்படுத்துகிறது
ஜன் 15 2014
-------

நீ 
கடிதமெழுதியிருக்கிறாய் எனக்கு. 
அது காதலை சுமந்து வந்திருக்கிறது. 
எழுத்துகள் யாவும் 
முத்தங்களாயிருக்கின்றன.
இப்படிக்கு எனுமிடத்தில் நீ இருந்தாய். 
அன்புள்ள எனுமிடத்தில் நானிருந்தேன்.
முகவரி எழுதுமிடத்தில் 
அரசாங்க முத்திரையிருந்தது. 
கடிதமோ கிழிந்திருக்கிறது.
ஜன் 6 2014
-----------
 தொங்கும் 
தண்டவாளத் துண்டு 
மணியொலிக்க, 
ஆரவாரமாகிற ஓர் அந்தி, 
உன்னைப்போலவே இருக்கிறது

அவள் பற்றி

மறுபடியும் கவிதை எழுதும் ஆசையை
புது உண்டியல் போல
எடுத்து வைத்திருக்கிறேன்.
அதன் வாயில் காதலைத் தான்
முதலில் போடலாம் என்றிருக்கிறேன்.
சில்லறைக் காசுகளின் சத்தத்தைப்போல
காதலையும் பெருஞ்சத்ததோடு
அள்ளித் தர நீ வேண்டும்.
நீ யார்? எங்கிருக்கிறாய்?
அல்லது செத்துவிட்டாயா?
எதுவும் தெரியாமல்
இந்தப் பொழுது எரியும் கானகமாகி
என்னை அதற்குள் தள்ளிவிட்டிருக்கிறது.
உண்டியலை உடைத்துவிடலாமென்றாலும் நாணயங்களற்ற
உண்டியலை உடைத்தென் செய்வது?
காதலையும், காதலியையும்
ஒருங்கே பார்த்தவர்கள்
எவரேனும் இங்குண்டா?
இருப்பின் வந்து விசாரித்துவிட்டுப்போங்கள் முகவரியற்ற அவளைப்பற்றி

கவிதை சைக்கிள்

இன்று அதிகாலை பனியினூடே
இமைபிரிக்கும்போது
என் மிதிவண்டியின் பூட்டை
உடைத்துக்கொண்டிருந்தது கவிதை

மறுபடியும் இமைகளை
மூடிக்கொண்டு விழித்திருந்தேன்

களவாடும் அதன் முயற்சிக்கு
இசைந்துகொடுத்து
சின்னச் சின்ன க்றீச்சிடுதலால்
என்னையும் உசுப்பியது மிதிவண்டி

உறங்குவதான எனது நடிப்பு
கவிதைக்குத் துணைசெய்ய
க்ளிங் க்ளிங் என மணியடித்தபடி
மிதிவண்டியை நகர்த்தியது அது

சூரியன் வந்த பிறகு
போர்வை விலக்கி
பற்கள் துலக்கி
முகம் கழுவி
தேநீர் அருந்தி
செய்தித்தாள் வரை
வந்து சேர்ந்தேன்

என் மிதிவண்டியில்
எங்கேயோ பயணப்பட்டுக்கொண்டிருக்கும்
அந்தக் கவிதையைப் பற்றி
எந்தச் செய்தியும் இல்லை
இந்தச் செய்தித் தாளில்

கவிதை விளையாட்டு

என்னுடன் விளையாட வருமாறு
அழைத்தது கவிதை

மறுப்பதற்கு காரணமேதும் அகப்படவில்லை
மட்டுமின்றி
விளையாடும் பருவம்
இன்னும் முடிந்துவிடவில்லையெனக்கு

ஐந்து கற்களைப்
பொறுக்கித் தந்தது
கவிதை

ஐந்து சொற்களைப்
பொறுக்கித் தந்தேன்
நான்

சொற்களை தன் தலைக்குமேலே
வீசிப்பிடித்து விளையாடி
இப்படித்தான் விளையாட வேண்டுமென்று கற்றுக்கொடுத்தபடி விளையாடியது
கவிதை

நானும் கற்களை
வீசிப்பிடித்து விளையாடத் தொடங்கினேன்

ஆட்டம் முடிந்த பின்
என் உடல்
காயங்களால் நிரம்பியிருந்தது

கவிதை
மற்றுமொரு
கவிதையாகி இருந்தது

நான் தோற்றிருந்தேன்
கவிதை வென்றிருந்தது

ஹாக்கி

வெறும் காதலாகத்தான் 
இருந்தது அது. 
மழைத்துளிகளாலும், 
வெயிற்கீற்றுகளாலும் 
கொஞ்சங்கொஞ்சமாக 
வானவில்லாக்கினேன். 
இந்த வண்ணங்கள் 
எங்கிருந்து வந்ததென 
நானறியேன்
--------
 
ஹாக்கி மட்டையின் வளைந்திருக்கும் 
பகுதிதான் வாழ்க்கையோ? 
எந்தப் பந்தை அடித்து 
எந்த வலைக்குள் வீழ்த்தப் போகிறோம்? 
பந்து நம் கையில் இல்லாவிட்டாலும் 
ஓடுவதை நிறுத்திவிடவா முடிகிறது? 
ஆட்டம் முடிந்துவிட்டதை 
அடையாளப்படுத்த ஊதப்படும் 
கடைசி விசில் சத்தம் யாரிடம் இருக்கிறது? 
விளையாட ஆளில்லாத 
வெற்று மைதானத்தின்
மிக நீண்ட தனிமையும்,
ஆழ்ந்த மௌனமும் 
தேவைப்படுவோர் யாருளர்?
ஜன 19 2013
வாழ்ந்த வீட்டை 
விற்க வேண்டிய அவலத்தால் 
சுருங்கிய அவனை
நில புரோக்கராக 
விரிய வைக்கிறது காலம்
மார்ச் 25 2013
---------
நடந்த கொலைக்குச் 
சாட்சியமாயிருக்கும் 
இக்கோழியிறகு 
காது குடையவும் 
தோதாயிருக்கிறது
--------
இன்றென் 
வீட்டுச் சுவரில் 
தத்தித்தத்திப் போக்குக் காட்டி 
பறந்துசென்ற 
சிட்டுக்குருவியிடம் 
சொல்ல முடியாமற்போன 
சோகத்தைத்தான் 
நாள்முழுதும் 
கொத்திக் கொண்டிருந்தேன் 
மார்ச் 20
----- 

தேவகிருபை

நகரத்தைத் தாண்டி நதிக்கரையில் அந்தச சிறிய கோயில் இருந்தது. பிரகாரச் சுவர்கள் நாலாப்புறமும் உயரவுயரமாக இருந்தன. வலது சுவரையொட்டிச் செல்கிற அந்தச் சாலை மரங்களடர்ந்த புதருக்குள் ஒளிந்துகொள்கிறது. சாலையின் மறுபக்கம் சில பெஞ்சுகள் போடப்பட்டிருக்கின்றன. அந்தி மசங்கும் நேரத்தில் கோயிலுக்கு வரும் மக்கள் பெஞ்சுகளை நிரப்பிவிடுவார்கள். பெஞ்சுகளையொட்டி இரண்டு மரங்கள் இருந்தன. அதற்கும் சற்றுத் தள்ளி கருவேலம் புதர்.
அந்த மரங்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய உருவம் கொண்டு அடர்ந்திருக்கவில்லை. இருவர் மட்டுமே உட்கார்ந்துகொள்ளும் அளவிற்கு சிக்கனமாக நிழல் தந்தன அவை. அந்த மரத்தடியில் தான் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். இருவரும் தம்முன் அலுமினியத் தட்டு வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே ஆளுக்கொரு இரும்பு வாளி இருக்கும். இருவரும் இடுப்பில் கந்தலாய் வேட்டியைச் சுற்றியிருப்பார்கள். இருவருக்கும் உருவத்தில் நிறையவே வித்தியாசமுண்டு. தன்னா எலும்புந் தோலுமாக, கலைந்த தலைமுடியோடு இருப்பான். அவனது அம்மைத் தழும்புகளால் விகாரமாக இருக்கும். ஏதோ விசித்திர நோயால் பீடிக்கப்பட்டு அவனது உடல் முழுக்க சிவந்த கொப்பளங்களும், காயங்களுமாக இருக்கும். கழுத்து, வயிறு, உள்ளங்கால்வரையிலும் சீழ்வடியும் காயங்களும், இரத்தம் வடியும் கொப்பளங்களுமாய் பார்க்கவே அறுவெறுப்பாயிருக்கும் அவனது தோற்றம். ஆனால், பக்தியோடு கோயிலுக்கு வருபவர்களுக்கு அவனது தோற்றம் அறுவெறுப்புக்கு பதிலாக பரிதாபத்தையே உண்டாக்கியது. அந்த பரிதாபம் அவனது அலுமினியத் தட்டில் சில்லறைகளாக மாறியது.
ஆனால், பிர்ஜீவின் நிலைமையோ வேறு. பார்க்க கொழுகொழுவென்று இருந்தான். வேட்டிக்கு மேல் கட்டுக்கோப்பான உடம்பு; உப்பிய கன்னங்கள். அவனது தோற்றம் பரிதாபத்தை உண்டாக்கக் கூடியதாக இல்லை. ஆனாலும், தன்னாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதால் பிர்ஜீவிற்கும் ஏதாவது கிடைக்கும். காயமும், தழும்புகளும் கொண்ட கோரமான உடம்புக்குத்தான் இங்கே மதிப்பு. தன்னாவின் தட்டை விட பிர்ஜூவின் தட்டு குறைவான வருமானத்தையே பெற்றுத்தருகிறது. சொல்லப்போனால் பிர்ஜூவின் தட்டு பெரும்பாலும் உதாசீனங்களால் தான் நிறைகிறது. பிர்ஜீவின் உடம்பில் எந்தக் காயங்களும், தழும்புகளும் இல்லாதது தான் இதற்குக் காரணம் போல.
தன்னாவைப் பார்த்து யாரும் பரிதாபப்படாமல் இருக்க முடியாது. அதிலும் பெண்கள் தன்னாவைப் பார்த்துவிட்டால் உருகிப் போய்விடுகிறார்கள். ஆனால் தன்னாவின் வாழ்க்கை நிலையோ முற்றிலும் வேறானது. காயங்களையும், கொப்பளங்களையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தன்னாவின் வாழ்க்கை செழிப்பு மிக்கதாகவே உள்ளது. போதுமான அளவுக்கு தன்னாவுக்கு உணவு கிடைத்துவிடுகிறது. அது மட்டுமா? அவனது அலுமினியத்தட்டு அவனுக்கு மது குடிக்கவும், கஞ்சா குடிக்கவும் தேவையான வருமானத்தையும் பெற்றுவிடுகிறது. பிர்ஜூவின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. பல நேரங்களில் பட்டினி தான்.
இந்த இரண்டு பிச்சைக்கார்களின் உலகமும் மிகவும் சிறியது தான், எனினும் அவர்களது தொழிலில் போட்டி உருவாகிவிட்டது. அது நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவிட்டது. தன்னாவின் சீழ்வடியும் காயங்களும், கொப்பளங்களும் அவனுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. ஒரு நடிகை தனது அழகை எண்ணி கர்வம் கொள்வதுபோல, தன்னா தழும்புகளும், காயங்களும் கொண்ட தனது உடலை நினைத்துக் கர்வம் கொண்டிருந்தான். தன்னாவின் உடம்பிலிருக்கும் கொப்பளங்களை நினைக்கும்போதெல்லாம் பிர்ஜூவுக்கு பொறாமை பொங்கி வழிந்தது. அழகே இல்லாத யுவதியொருத்தி, அழகு தேவதை ஒருத்தியைக் கண்டு வெறுப்பது போல பிர்ஜூவுக்கு தன்னாவின் உடம்பின் மீது வெறுப்பு குடி கொண்டுவிட்டது.
நாளுக்கு நாள் இந்த வெறுப்பு பிர்ஜூவைப் பாடாய்ப்படுத்தியது. தன்னாவின் அலுமினியத்தட்டில் விழும் ஒவ்வொரு நாணயமும், பிர்ஜூவின் மேல் ஈட்டியாய் இறங்கியது. நாணயம் விழும் சத்தம் ஒவ்வொன்றும் பிர்ஜூவின் இதயத்தை குண்டு விழுந்ததைப் போல உலுக்கியது.
எப்படியாவது தன்னாவை விட அதிகமாக பிச்சையெடுத்து வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்ற பேராசையில், கோயிலுக்கு வருபவரின் மனத்தைக் கரைக்கும்படி வலியால் துடிப்பது போல நடிப்பது… என பலவிதத்திலும் முயற்சிகள் செய்துவிட்டான் பிர்ஜூ. ஆனாலும் தன்னாவின் தழும்புகளுக்கு முன் பிர்ஜூவின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரானது.
தன்னாவின் மேல் இவ்வளவு வெறுப்பும், பொறாமையும் பிர்ஜூவுக்கு உண்டாக, தன்னாவும் தான் காரணம். தன்னா கறியும் சோறும் சாப்பிடும்போது, பிர்ஜூ காய்ந்த ரொட்டித் துண்டை அதக்கிக் கொண்டிருப்பான். ரெண்டு கறித்துண்டுகளை பிர்ஜூவுக்குத் தரலாமெனவும் தன்னா எண்ணியதில்லை. அவன் ஒருவனே தான் சாப்பிடுவான். மது அருந்தும்போதும் அப்படித் தான். ஒரு மிடறு கூட தர மாட்டான். மதுவின் வாடையோ பிர்ஜீவை சுண்டி இழுக்கும். தன்னா இப்படி சுயநலமா இருப்பதால் தான் பிர்ஜூவின் மனசில் இவ்வளவு வெறுப்பும், பொறாமையும்.
பிர்ஜூ சில நேரங்களில் யோசிப்பதுண்டு. தன்னாவின் இந்த நோய் எவ்வளவு காலம் நீடித்துவிடப் போகிறது? இந்தக் கொப்பளங்களும், காயங்களும் நிலையானதா என்ன? என்றாவது ஒருநாள் இந்த நோய் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்? பிர்ஜீ தன்னாவிடம் இந்த நோய் பற்றி பலமுறை விசாரித்திருக்கிறான். அப்போதெல்லாம் , தனக்கு உடம்பில் எவ்விதமான வலியோ, வேதனையோ கிடையாது என்றே தன்னா கூறுவான். இது ஒருவிதமான தொற்று நோய். தொட்டால் ஒட்டிக்கொள்ளும். கோயிலைச் சுற்றி வீடுகள் எதுவும் இல்லாததால் இந்த நோய் பரவும் அபாயம் இல்லை என்பான் தன்னா. வாழ்நாள் முழுவதும் இந்த நோயோடுதான் தன்னா இருப்பான் என்பதை நினைக்கும்போது பிர்ஜூவுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. வேறு இடத்திற்குப் போய் விடலாமா என்றுகூட பிர்ஜீ யோசித்தான். நகரத்தைத் தாண்டி இருப்பதால் தான் இங்கே பிச்சைக்காரர்கள் கூட்டம் மொய்ப்பதில்லை. வேறு இடங்களில் போட்டி அதிகமாக இருக்கும். இங்கே தன்னாவைத் தவிர போட்டிக்கு யாருமில்லை. அதனால், வேறு இடம் தேடும் முடிவைக் கைவிட்டான்.
ஒருநாள் இரவு முழுதும் பிர்ஜீக்கு தூக்கமே வரவில்லை. எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்ததில் விடிந்தேவிட்டது. அந்த விடியல் பிர்ஜூவுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுப்பதாக இருந்தது. இன்னமும் தன்னா தூங்கிக்கொண்டிருந்தான. சுள்ளிகள் எரித்து தேநீர் தயாரித்தான் பிர்ஜூ. தன்னா எழுந்ததும் தேநீர் டம்ளரை அவனிடம் நீட்டினான். தன்னாவுக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எதுவும் பேசாமல் தேநீர் அருந்தினான் தன்னா. அன்றிலிருந்து பிர்ஜூ தன்னாவிடம் நெருங்கிப் பழகத் தொடங்கினான். அவனோடு சேர்ந்தே சாப்பிட்டான். இரவிலும் வெகு நேரம் வரை தன்னாவோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு தன்னாவின் கம்பளி விரிப்பிலேயே உறங்கிவிடுவான். “ அடடே, உன் காயத்திலிருந்து இரத்தம் வருது பார். கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்துவிடுகிறேன் வா” என்று தன்னாவுக்கு பணிவிடைகளும் செய்தான்.
”வேண்டாம் பிர்ஜீ..இது தொற்று வியாதி. உனக்கும் ஒட்டிக்கொள்ளும்” என்று தன்னா மறுத்தாலும், பிர்ஜீ காயங்களைச் சுத்தம் செய்து எண்ணெய் வைத்துவிடுவான். கொஞ்சமும் தயங்காமல் காயங்கள் துடைத்த தன் கைகளைத் தனது வேட்டியிலேயே துடைத்துக்கொள்வான்..
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் பிர்ஜீ பழகுவதை தன்னாவால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இனி சாப்பிடும்போது பிர்ஜூவுக்கும் கொடுத்துவிட்டுச் சாப்பிடுவது என நினைத்தான் தன்னா. ஆனாலும், நினைத்ததோடு சரி.. பிர்ஜூவோ எவ்வித மாற்றமுமில்லாமல் சகஜமாகவே தன்னாவுடன் பழகினான்.
ஒருநாள் காலை தூங்கியெழுந்த பிர்ஜூவின் பாதங்களில் ஏதோ ஊர்வதுபோல இருந்தது. பூச்சி புழு ஏதேனும் ஊர்கிறதா என தடாலென எழுந்து வேட்டியை உதறிப் பார்த்தான். எதுவும் தட்டுப்படவில்லை. ஆனால், அவனது இடுப்பில் சின்னச் சின்னதாய் சிவந்த கொப்பளங்கள் தென்பட்டன. உடனே அவன் தன்னாவை எழுப்பினான். எழுந்து உட்கார்ந்த தன்னா அந்தக் கொப்பளங்களைப் பார்த்ததும்,” சொன்னேனே கேட்டியா? உனக்கும் வந்துவிட்டது இந்த வியாதி. என் கிட்ட வராதேன்னு எத்தனை முறை சொன்னேன்? என் காயங்களைத் தொடாதேன்னு சொன்னேன்…கேட்டியா நீ? இப்ப பாரு…..” என்று கத்தினான் தன்னா.
“ உனக்கும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்ததா தன்னா?” என்று கேட்டான் பிர்ஜீ.
அந்தக் கொப்பளங்களைக் கூர்ந்து பார்த்த தன்னா,” ஆமாம்… இதே மாதிரிதான் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தது” என்றான் தன்னா.
பிர்ஜூ எதுவும் பேசவில்லை. அமைதியாக எழுந்து கோயிலை நோக்கி நடந்தான். கோயிலுக்குள் சென்று தன் வேட்டி முனையில் முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தை கடவுள் சிலைக்கு முன் வைத்துவிட்டு கைகள் கூப்பி, தளுதளுத்த குரலில்,” கடவுளே, என் மேல் இரக்கம் காட்டியதற்கு நன்றி. என் வேண்டுகோளை ஏற்று எனக்கும் இந்த வியாதியைக் கொடுத்து என் மேல் கிருபை காட்டிவிட்டாய் கடவுளே. இன்னும் சில நாள்களில் என் உடம்பும், தன்னாவின் உடம்பைப் போல் ஆகிவிடும். கோயிலுக்கு வருவோர் இனி என்னைக் கண்டும் பரிதாபப் படுவார்கள். என் அலுமினியத் தட்டும் இனி நிறையும்…….” மேற்கொண்டு பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது பிர்ஜீவுக்கு. பிர்ஜூ ரொம்பவும் சந்தோசமாக இருந்தான்

கடிகார முள்

கடிகாரத்தில் 
குத்தியிருந்த 
முட்களை 
பிடிங்கிப் போட்டுவிட்டேன்
காலத்தின் காயம் 
ஆறிக்கொண்டிருக்கிறது.
மே27 2013
--------
 
நான் தொலைந்துதான் 
போய்விட்டேன் போல. 
வீட்டையே சல்லடையாக்கி 
அலசிய பின்னும் 
அகப்படவில்லை மூக்குக்கண்ணாடி. 
முதலில் என்னைத் தான் தேட வேண்டும் 
யாருக்கும் தெரியாமல் 
எனக்கும் தெரியாமல்
மார்ச் 29

சேகர்

சுழலும் மின்விசிறிக்குக் கீழே
நீயும், நானும் 
சொற்களைப் பிசைந்துகொண்டிருக்கிறோம்
காற்றை அனுபவிக்க 
நமக்கெங்கே தெரியும்?
மே27 2013
----------
 
நான் கோணப்புளியங்காய் 
என்பேன். 
நீயோ கொடுக்காப்புளி 
என்கிறாய். 
என்ன செய்வது? 
நான் கோணப்புளியங்காய் 
சாப்பிட்டுப் பழகியவன். 
நீயோ கொடுக்காப்புளி 
சாப்பிட்டுப் பழகியவன்
மே27
----------
 
வெயிலை, வெயிலே 
என்று கூப்பிட்டு அலுத்துவிட்டது. 
சேகரே எனக் கூப்பிடலாம் இனி. 
சேகர் கோபம்கொள்வானே? 
அவனை இனி 
வெயில் எனக் கூப்பிடலாம்
மே 27
-------
 
அதற்கு முன்னும்
அதற்குப் பின்னும் 
இயல்பாகத்தான் இருந்தேன்
 யாரோ தொட்டுவிட்டதற்காக 
சுருங்கிக் கிடக்கும் 
இதையா வாழ்க்கை 
என்று சொல்வது?
மே 27
நான் மதுக்கோப்பையின் 
நிழலில்
நிரம்பி நிரம்பி
காலியாகிக்கொண்டிருக்கிறேன்
மே 30 2013
-------
ஞாபகக் கழுதையை 
எட்டியுதைத்து 
விரட்டியாயிற்று
எங்கிருந்தோ அது
காகிதம் தின்னப் பழகிவிட்டிருந்தது
மே 30
---------
 அவரைப் பற்றி 
அவரில்லாதபோது 
கதைத்தலாகாது
அவர் செத்துவிட்டவரெனில் 
இன்னும் உனக்கு சுலபம்
அவரை நினைத்தலாகாது
மே 30 

தற்கொலை

சருகாகி வானேகும் சிறுபறவை
அதே கணம்
பறவையாகி நிலம் நாடும் 
ஒரு சருகு
அந்நொடி நானோ 
மரம்..மரம்
மே 31 2013
-------
ஒவ்வொரு முத்தமாய் 
பொறுக்கி வீசுகிறாய். 
குளமாகி 
அலையலையாய் 
விரிந்தபடி நான்
மே 30
------ 
 அவ்வளவு 
சுருக்கமான செய்தியாகிவிடும் 
அபாயமிருப்பதால் 
யாருக்கும் காட்டாமல் 
ஒளித்து வைத்திருக்கிறேன் 
எனது தற்கொலையை

நானும்

போட்டது போட்டபடியிருக்கிறது 
வீடு. அழுக்குச்சட்டை.. 
நகர்த்திய நாற்காலி.. 
கசடுதங்கிய தேநீர்க்கோப்பை.. 
அப்புறம் நானும்
--------
எல்லாம் மேகம் 
என்றாகிவிட்டது. 
இப்போதைக்கு
வானம் என்பதில்லை
வானத்தில்
---------
குடை விரிக்கும் 
சடங்கில் சிக்கியிருக்கிறேன் 
மௌனம் பொழியும் 
திரள் மேகங்களோடு 
நீ 
அரிசியில் கல் பொறுக்கும் 
உன்னையும்
உன் கண்களையும் ஏமாற்றி
உன் பற்களுக்கு வரும்
ஏதோவொரு கல்
உனக்கென்னை 
ஞாபகப்படுத்தும்
-------
நான் நிற்கிறேன்
படுத்திருக்கிறது என் நிழல்
அரூபக் கோடாக 
நீளும் என் பார்வை
90 டிகிரியில் 
ஒரு முக்கோணத்தை 
வரைகிறது பாருங்கள்
ஜீன் 8 2013 
---------
முதலில் 
ஓடிவந்து விசாரித்தது 
கண்ணீர்தான்
அப்புறம் தான் 
நீ 
-------
சுட்டு வீழ்த்திய பறவையோ
மரம் உதிர்த்த மலரோ காண்பாயாக
நூலறுந்த நொடியில்
ஜீன் 2 2013

நினைவுச் சட்டை

நினைவு 
உரித்துப்போட்ட சட்டை
 மனக்கிளையில் அசைகிறது.
பார்க்க பயமாயிருக்கிறது
அதுவே.
------
தண்டவாளங்களாகத் தடதடக்கின்றன
இரண்டு கண்களும். 
தூரத்தில் கூடிக்குவியும் புள்ளியை 
 பார்வையெனும்போது, 
அங்கே ஒரு இரயில் 
கூவிச் செல்கிறது
--------
தாழப் பறந்து
தட்டான் தலை மோத
நடுங்கும் குளம். 
இரை விழுங்கி 
அசைபோடுகிறது குளம். 
கடைசிக் கல்லோடு 
படித்துறையில் நான். 
உனக்கான காத்திருப்பில்,
 இரை வீசும் வித்தையறிந்தேன்
-------
பதினாறு கறுப்பும், 
பதினாறு வெளுப்புமாய்,
 முப்பத்திரு நினைவுகள் நகர்கின்றன 
என்மேல்.
 கவனம்..கவனம்.. 
உன் சிறு நகர்த்தலில், 
மடக்கி வைக்கப்படலாம் 
நான்.
ஜீன் 21 2013 
எறும்புகள் பற்றிய
சொற்கள் சிலவற்றை
வரிசைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்
அவை சாரைசாரையாய் 
நகரத் தொடங்குகின்றன
இப்போது 
ஒரு பாதை கிடைத்திருக்கிறது 
எனக்கு
 ஜீ 26 2013
---------
பாருங்கள்.. 
இரவை விட
இருளை விட
அந்த மலை 
எவ்வளவு இருட்டாய் இருக்கிறது
பாருங்கள்..
ஜீன் 21 
-------
கேள்விக்குறியை 
தலைகீழாகத் திருப்பி வைத்த பிறகு
சொற்களை மாட்டித் 
தொங்கவிட 
வசதியாயிருக்கிறது
ஜீன் 21 2013 
உறக்கம் 
ஒரு கண்ணாடி வளையல்... 
இவ்விரவு, இந்தப்பாய்
இந்த வலி
பெண்ணின் 
மென்கரமாக்குகின்றன 
என் உடலை..

ஆக் 2 2013
---
ஊத ஊத
உப்பி உப்பி
வண்ணங்கள் விரிய
பலூனாகி
வெடிக்கும் நினைவை
வேடிக்கைப் பார்ப்பதல்லால்
வேறென்ன காண்பாய் 
குழந்தாய்.
ஜீ 27 2013 

ஹைக்கூ

ஜன்னலோரம் நான்
நிலவற்ற இரவு 
மின்னல் மின்னல்

மழைக் கிறுக்கனின் 
தொணதொணப்பு 
இவ்விரவை உறங்க விடவில்லை

மனம் ஒரு குரங்கு.
மனம் ஒரு நாய்.
மனம் ஒரு தேள்.
மனம் ஒரு தேனீ.
மனம் ஒரு சிலந்தி. 
மனம் ஒரு குருவி. 
மனம் ஒரு குயில். 
மனம் ஒரு...... 

ஏணி

சாய்ந்து கிடக்கும் நான் 
ஒரு முக்கோணத்தை 
உண்டாக்கியிருக்கிறேன். 
ஏறிச் செல்லும் நீ, 
எட்டியுதைக்கவும் 
கற்றிருக்கக் கூடும். 
எனினும், 
உச்சியென்பது 
ஏணியால்தான் சாத்தியப்படும் 
உனக்கு.
செப் 9 2013
--------
 
என் அமைதியின் தலையை
 நனைக்கும்
மழைத்துளி 
உன் விரல்நுனியிலிருந்து 
சொட்டுகிறபோதெல்லாம்
ஆர்ப்பரிக்கிறேன் 
கடலலையின் 
கால்கள் பொருத்தி..

யானை

இதுதான் கடைசிமுறை
குறி தப்பினாலும் 
வேறு கல்லை கையிலெடுக்க 
அனுமதியில்லை
வீசுவதன்றி உபாயமெதுவுமில்லை
அதைப் பறக்கவிடுதல்
பிடித்துப்போகிறது இக்கணத்தில்.
செப் 12 

-----

இங்கு மேகமில்லை 
இடியில்லை
மின்னலில்லை
தூறலில்லை
மழையில்லை
வானமுமில்லை.
-----
 
யானை என்பதென்ன? 
பெரிய்ய்ய்ய உருவம். 
கருப்பே அதன் நிறம். 
தும்பிக்கை ஒன்றிருக்கும். 
அசைந்தபடி காதுமடல்கள் இரண்டு. 
தூண் கால்கள் நான்குண்டு. 
வெண் தந்தம் வளைந்திருக்கும்.
வாலொன்று தொங்கும். 
சின்னச்சங்கிலிக்கு கட்டுப்பட்டிருக்கும்.
நேற்று 
பறவையைப் பற்றியதாகவே 
இருந்ததந்தக் கனவு
ஒரு காக்கையைக் கூட 
பார்க்கவில்லை இன்று
பறப்பதைப் பற்றி 
என்ன பேசுவது நான்?!
செப் 14 2013 

--------
நீ வந்து சேர்ந்த 
சில நொடிகளுக்கு முன்தான் 
விடைபெற்றுச் சென்றது 
கடைசி துரோகம்
என்னிடமிருக்கும் அன்பை 
உனக்கும் திறந்து காட்டுகிறேன்
அதை உருட்டிப் பிசைகிறாய் 
இப்படியாக
துரோகங்களால் 
நிகழ்கிறது வாழ்க்கை
 -----
 பேருந்து ஜன்னல் 
கண்ணாடிகளில்
ஆயிரமாயிரமாய்
அரூபக் கண்கள் முளைக்கப்
போதுமானது
இச்சிறு மழை
செப் 12

ஹைக்கூ

விளக்கை அணைத்ததும்
திறந்த ஜன்னல் வழி
உள்நுழைந்த இருள். 
செப் 17 2013


தலைக்கேறிய போதையில்
கண்கள் அயர
இமைகள் சார்த்தி
ட்யூப் லைட்டை 
அணைத்துவிட்டேன்
 
வாசலுக்கு நேராக
அறைச் சுவர் ஒட்டி 
நின்றிருக்கும் ஆளுயர
நிலைக் கண்ணாடியில் 
கொட்டுகிறது
வீடு நனைக்காமல்
ஈரம் தீண்டாமல்
சோ வென்றொரு மழை.
யானையினுடையவைப் போல்
பிரிவின் கண்கள்
மிகச் சிறியவை
கண்ணோரங்களில்
வழிந்து நிற்கும்
நீர்த்தாரைகளோடு தான்
எல்லா யானைகளும்.
செப் 19 2013

வெளிச்சத்தின் மேல் கால்வைத்து
நிழலைக் கறையாகப் படிய வைப்பதன்றி
வேறொன்றும் செய்யத்தெரியாத
நடைபழக்கம் எனக்கு.

செப் 18  

வாசனை

முன்பு போலில்லை
தடித்துப் பிரம்பாகி
தோல் மென்மையிழந்த விரல்கள்
ஓவியாக்குட்டியின் கண் பொத்துகிறேன் 
மாமா.. கண்டுபிடித்துவிடுகிறாள் நொடிக்குள்
 எப்படி தெரிந்தாய் நானென்று? 
வாசம் வெச்சித்தான் மாமா. 
மாமாக்களுக்கென வாசமிருப்பது 
மாமாக்களுக்குத்தான் தெரிவதில்லை

செப் 19 2013

ஹைக்கூ

ஒற்றைச் சிறகொடு
கூட்டின் தனிமைப் பகலில்
நிழலும் வெயிலும்.

நடத்துனரின் ஒவ்வொரு விசிலுக்கும்
இமை சுருக்குகிறது 
உறங்கும் குழந்தை

நீதானே 
என் நகக்கண்களையும் 
அழ வைத்தாய்!
 
 என் உள்ளங்கைக் குழிக்குள்
குறுகுறுத்துச் சுழல்கிற
பம்பரத்தின் காலமென
வாய்த்திருத்தாய் 
எனக்கு நீ.
 

விடியல்

நின்றபடியே 
சாலையோர சாக்கடையில்
மலங்கழிக்கும் 
கிழவனுக்குப் பிற்பாடுதான்
எல்லா இரவும் 
விடிகிறது.
5 அக் 2013
--------
 உன்னோடு பேசுகிறேன் என்பதை
சொல்லி கண்ணீர் சொறிய 
ஆளேதுமில்லா உலகமொன்று 
சுழல்கிறது இங்கே. 
தவிரவும், 
உன்னோடு பேசுவதற்கு 
எதுவும் தேவையில்லை.. 
குரலோ, உதடுகளோ, சொற்களோ, 
நீ கூட

காக்கையிரவு

மிகக் கடுமையாகவே 
இருக்கிற மழைக்குப் 
பின்னான வெயிலாய் 
விரவியிருக்கிறாய் 
என்னைச் சுற்றி
8 அக் 2013
--------

 
கவ்வுதலும்
கவ்வப்படுதலும் 
பற்களின் கூர்மையில் ஒழுகும் 
துயரென்கிறாய். 
குட்டியை இடம் மாற்றும் 
தாய்ப்பூனையைக் 
கவனித்துக் கொண்டிருக்கிறேன் நான்
7 அக் 2013

 
சிறுதுண்டு இரவென 
அமர்ந்திருந்தது காகம். 
ஒரு கல் வீச, 
சிறகுகள் முளைத்துப் 
படபடக்கிறது 
இரவு
7 அக் 2013

வருகை

உன்னை வரவேற்கும் 
தோரணம் 
என்னிரு கண்கள். 
புருவ மத்தியில் 
நுழைகிறாய் 
நீ
10 அக் 2013

தள்ளுயிழு

தள்ளு இழு 
என்னுமிரு சொற்களை 
எழுதிக்கொண்டு 
அசைந்துகொண்டேயிருக்கும் 
கவிதைக்குள் 
எனக்கு 
எந்த வேலையும் 
இருக்கப்போவதில்லை.

இரண்டாம் ஜன்னல்



மேற்குச் சுவரோரமிருந்து 
கிழக்கிற்கு ஊர்ந்தது
ஜன்னல்வழி நுழைந்து 
வீட்டுத்தரையில் வீழ்ந்த வெயில்
ஊர்ந்து, தேய்ந்து
அதே ஜன்னல்வழி வெளியேறி 
வீதியில் தகித்து நிற்கும்
வெயிலை வீட்டிற்குள் அழைக்க
மேற்கில் ஜன்னலில்லை 
என் வீட்டில்.
13 அக் 2013

பறி

அகன்ற வெளி தான்
யானையின் உடம்பு
இந்த ஒற்றை மரத்தைத்
தும்பிக்கை என்பேன்
உடம்பைக் கிழித்துத் 
தும்பிக்கை மீதமரும் 
பறவையொரு பழம்
நான் 
பழம் பறிக்கத் தான் வந்தேன்.
14 அக் 2013

எரிமலை

புழுதி மண்ணுக்குள் 
தன்னைப்புதைத்து
சிறகசைத்து
உடல்குலுக்கி
விருட்டென பறந்தது சிட்டு
ஓர் எரிமலையை புகையவிட்டு..
15அக் 2013

மீள்

வெகுநேரமாய் உட்கார்ந்திருக்கும்
பச்சை வெட்டுக்கிளியில்
குத்தி வைத்திருக்கிறேன் பார்வையை
ஒரு தவ்வுதல் தேவையாயிருக்கிறது 
இந்தக் கணத்தை மீட்டெடுக்க..

பறவை

உயரத்தில்
வெகு உயரத்தில் 
பறவையாகவேப் பறந்தது அது. 
கீழே இறங்க இறங்க
பெயர் தேடுகிறேன்
தன் பெயரை
தானே அறியாத பறவைக்கு.
அக் 19 2013

விதுரன்

விதுரன் சிறுகதை

வயிற்றைக் கிள்ளிக் கிள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் பசியின் தலையைத்; திருகிப் போட்டுவிடலாம் என்றாலும் கண்ணுக்கெட்டிய துhரம் வரையிலும் ஒரு குடிசை கூட தென்படவில்லை தண்டவாளத்தின் இரு பக்கமும் வேலிகாத்தான் முள் புதா; புதராக மண்டிக்கிடக்கின்றன ஏதேனும் ஒரு இரயில் வராமல் பாதையோர முட்கிளைகள் கொஞ்சமும் அசையாது போலும். மதியின் தலைக்கு மேல் கீச்சிட்டுப் பறந்தது ஒற்றைக் கிளி;. அந்தக் கிளிக்குப் பாதைகள் வகுக்கப்படாத வானம் எவ்வளவு பாதுகாப்பனதாக இருக்கிறது? கிளிக்கு மட்டுமில்லை எல்லாப் பறவைகளுக்குமான வாழ்க்கை தானே இது.
கண்ணுக்கெட்டிய துhரத்தில் மெதுமெதுவாக வளைந்திருக்கும் இந்த இரயில் பாதை இன்னும் எவ்வளவு துhரம் செல்லுமோ எந்தெந்த நகரங்களையும் எங்தெந்த மனிதா;களை இணைக்கவும் இந்தத் துண்டவாளங்கள் வேகாத வெயிலில் தகித்துக் கொண்டிருக்கின்றனவோ செருப்பணிந்த கால்களை இடறிக்கொண்டேயிருக்கும் இந்த ஜல்லிக்கற்கள் கானலை உண்டாக்கியபடி இருக்கின்றன இந்த ஒரு மணிநேரமாக ஒரு இரயில் கூட எதிh;படாத பெருத்த ஏமாற்றத்தோடுதான் தண்டவாளங்களுக்கு நடுவே நடந்து கொண்டிருந்தான் மதி. இந்த இரயில் பாதையில்தான் ஏதோவொரு இடத்தில் அவனது மரணம் சம்மணமிட்டு இவனுக்காக உட்காh;ந்திருக்கும்.
நடந்து நடந்து கால்களில் வலியும் குடைச்சலும் பிசாசு போல தொற்றிக் கொண்டுவிட்டது இந்தப் பிசாசையும் துhக்கிக் கொண்டு நடப்பது மிகச் சிரமமாக இருந்தது அவனுக்கு. காலையில் ரவி கடையில் ஒரு டீ குடித்ததோடு சரி. அப்போது கூட செத்துப்போகும் எண்ணம் அவனுக்குள் முளைவிடவில்லை. பசிக்கிறது.
நடக்க நடக்க தலை பெருத்து கால்கள் வளா;ந்து நெடுநெடுவென்று விஸ்வருபமெடுத்து மிருகமாகிவிட்டது இந்தப் பசி. மிகக்கொடூரமான கைகளும் அதில் கூh;கூரான நகங்கள் வளா;ந்த நீளநீளமான பல்லாயிரம் விரல்களும் முளைத்திருக்கின்றன அதற்கு அது ஏதொவொரு இடத்தில் உட்காhந்திருக்கும்; மரணத்தை விட படு பயங்கரமானது.
இம் மிருகம் அவனை வேட்டையாடத் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது அவனைப் பிறாண்டி பிறாண்டி, இரத்தம் சுவைத்து, மரணத்தின் ருசி அறியும் ஜ்வாலையை அவனுக்குள் பற்றவைத்துவிட்டது.
மரணம்.. மரணம் மட்டுமே அவனுக்கு பசி மிருகத்திடமிருந்து பு+ரண விடுதலையைப் பெற்றத் தர முடியும் அவனது வாழ்வில் குறுக்கும், நெடுக்குமாக அலைக்கழிந்து அவனை உலுக்காட்டிய மரணங்கள் யாவுமே துh;மரணங்களாகவே அமைந்து விட்டன.
வேறொருத்தியோடு அப்பாவுக்குத் தொடற்பிருப்பதாகக் யாரோ சொல்லக்கேட்டு மதியின் அம்மா அரளி விதைக்கு தன்னை பலிகொடுத்துக் கொண்டாள். அப்போது மதிக்கு ஏழெட்டு வயதுதான் இருக்கும். அதன் பிறகு அந்த வேறொருத்தியோடு அப்பாவுக்குத் தொடா;பிருந்ததாக எந்த ஆதாரங்களும் மதியின் கண்களுக்கு தென்பட்டதேயில்லை அப்பாவும் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. அம்மா செத்த பிறகு அப்பாவின் சமையல் தான் ருசியான சமையல் வாய்த்தது அரசியிடமிருந்துதான்.
மதிக்கும் அரசிக்கும் கல்யாணமான ஒரே வாரத்தில் பள்ளிக்கூட கிணற்றில் மிதந்தாh; அப்பா. தாத்தா கூட அதே கிணற்றில் முழ்கிச் செத்ததாகத்தான் ஊருக்குள் பேசிக்கொள்வாh;கள.; செல்வம் மாமா லாhpயில் அடிபட்டு செத்தது, எதிh;வ{ட்டு சரண்யாவின் அப்பா மின்சாரம் பாய்ந்து செத்தது, பியு+ன் கந்தசாமி பிளேட்டில் கழுத்தறுத்துக் கொண்டது… எத்தனையெத்தனை துh;மரணங்கள்? அவனுக்குத் தொpந்து இரயிலில் அடிபட்டுச் செத்தவா;கள் யாருமில்லை அதனால்த் தான் தன் சாவை இரயிலுக்கு ஒப்படைத்துவிட்டான்.
துh;மரணங்கள் பல பாh;த்துப் பாh;த்துச் சலித்துவிட்டாலும் கூட அரசியின் மரணம் தான் மதியை ரொம்பவுமே உலுக்கியெடுத்துவிட்டது. அன்பரசி தான் அவள் பெயா.; மதிக்கு மட்டும் அவள் அரசி தான.; எவ்வளவு அழகானவள் அவள். இப்படியொரு அழகியின் முத்தங்களில் குளிக்கும் பாக்கியம் தனக்கு வாய்க்குமென மதி கற்பனை கூட செய்ததில்லை. அடா;த்தியான புருவங்களை உயா;த்திக் காட்டி உதடுகள் சுழித்து இன்ப இம்சைகளால் அவனைக் கரைத்தவள் அரசி. அத்தனை சீக்கிரத்தில் அவனை விட்டுப் பிரிந்துவிட்டாள். பாh;த்துப் பாh;த்து சமைத்து, பக்குவமாய் பறிமாறி நாவின் சுவை நரம்புகளைத் தூண்டிவிட்டவள் அவள். கல்யாணமாகி பிறகு அரசியின் சமையல், மதியின் உடம்பு பு+தம்போல் உப்ப வைத்திருந்தது.
எல்லாம் ஆறே மாதம் தான். மாலையில் வீடு திரும்பிய மதி கதவைத் திறந்ததும் உறைந்து போனான். மின்விசிறியில் தொங்கிக்கொண்டிருந்தாள்;; அரசி;. மூன்று மாத சிசு வயிற்றிலிருக்க இப்படி நாண்டு கொண்டாள். அவள் இப்படி நாண்டுகொண்டு செத்துப் போனதற்கான காரணத்தின் நுனியை மதியால் கண்டுபிடிக்கவே முடியவில்லை
அரசியின் நினைவு முதலையின் பிளந்த வாயாகி அவனை கல்விக் கொண்டிருந்தது தனிமையில் விட்டம் பாh;த்து விட்டம் பாh;த்து சு+ன்யமாகிக் கொண்டிருந்தான் உடம்பு ஒற்றடைக்குச்சியாகிட்டது. வீடு வீடாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக பாழாகிவிட்டது. சமைக்க ஆளில்லாமல் பாத்திரங்களை எலிக்குஞ்சுகள் வீடாக்கிக் கொண்டன
தனக்கு சமைக்கத் தொpயாதது குறித்து வருந்தும் மனநிலை ஏதும் உண்டாகவில்லை அவனுக்கு. இந்தத் தனிமையை எப்படிக் கொலை செய்து சாகடிப்பது என்ற கேள்வியும் உதிக்கவில்லை அவனுக்கு. பசி அதிகமாகப் பிறாண்டும்போது ரவி கடையில் போய் நிற்பான். ஒரு டீயோ அல்லது தயிர; சாதமோ வாங்கிக் கொடுத்து பசியைச் சமாதானப்படுத்துவான்
மதிக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவன் அம்மா செத்த ஒரு வாரத்தில் பிறந்தவள்தான் எதிh;வீட்டு சரண்யா. மின்சாரம் தாக்கி விறைத்துக் கிடந்த அப்பாவின் உடலைப் பாh;த்து, உறைந்து போன சரண்யாவை கொஞ்சங் கொஞ்சமாக மதி தான் தேற்றினான். சிறுவயதில் அப்பாவைத் இழந்துவிடுவதின் வலியை அம்மாவைத் இழந்ததன் மூலம் அனுபத்திருந்ததால் மதிக்கு அதன்பிறகு சரண்யாவின் மேல் கரிசனம் வோ;விட்டிருந்தது
சரண்யா வயசுக்கு வந்து சடங்கானபோது அரசி தான் கூடவே இருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தாள.; அரசி நல்ல மனசுக்காரி. பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பி இரவு ஒன்பது மணிவரையிலும் அரசியோடுதான் ஒட்டிக்கொண்டிருப்பாள் சரண்யா
ஆனால் அரசி போன பிறகு வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டுவிட்டாள் சரண்யா. இன்னும் சொல்லப் போனால் சரண்யா மதியின் கண்களில் கூட படுவதில்லை. என்ன காரணமாக இருக்கும் என்பதையும் யு+கிக்க முடியவில்லை அவனால். ஒருவேளை வீட்டில் அரசி பேயாக உலவுவதாக வதந்தி பரவிவிட்டதோ என்றும் கூட யோசிக்க வேண்டிய நிh;பந்தம் ஏற்பட்டது மதிக்கு
டீக்கடை ரவி தான் சொன்னான், “நீ வேற தனியா இருக்க… அந்த சரண்யா வயசுக்கு வந்த பொண்ணு. அதனால தான் அனுப்பாமாட்டேங்குறா அவ அம்மாக்காரி”. ரவி சொன்னதை காதுகளுக்குள் அனுப்ப முடியவில்லை மதிக்கு. நேரடியாக சரண்யாவின் அம்மாவிடமே கேட்டுவிட துணிந்தான.; ரவி சொன்னது போல் நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து சரண்யாவின் அம்மா சொல்லி முடித்தபோது தான் மதிக்குள் மனிதா;கள் மீது வெறுப்பு ஒரு வலைபோல பின்னத் தொடங்கியது முதன்முறையாக.
மனைவியை இழந்தவன் மேல், மற்ற மனிதா;களின் பா;வை கருணையற்றதாகத் தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டபோது, தனக்குள் அரசியின் மேல் அதீத வெறுப்பு உருண்டு செல்வதைக் கவனித்தான் மதி. அரசியின் நினைவுகளோடு நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தவனுக்கு, அந்த நினைவுகள் பெரும் இம்சையாக மாறிவிட்டது
இன்னமும் ஒரு இரயிலை எதிh;கொள்ள முடியாத சலிப்பும் கால்களைத் தொற்றிக் கொண்டு கூடவே வரும் வலி பிசாசும், வயிற்றைப் பிறாண்டிக் கொண்டிருக்கும் பசி மிருகமும் அவனது நடையின் வேகத்தை வெகுவாகவே குறைத்துவிட்டிருந்தது. அப்படியே உட்காh;ந்து கொள்ளலாம் என்றாலும் இந்தத் தண்டவாளங்கள் அனலாகக் கொதிக்கின்றன கண்ணுக்கெட்டிய தூரத்தில் சில வீடுகள் தென்பட்டன. கோயில் கோபுரம் ஒன்றும் உயரமாகத் தெரிந்தது
போன வாரம் இப்படியான ஒரு கோயிலுக்குத்தான் பெண் பாh;க்க கூட்டிப் போனாh; புரோக்கா; கணேசன். டீக்கடை ரவி தான் மறுமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி புரோக்காpடம் சொல்லி ஏற்பாடு செய்தான். இந்த மூன்று நான்கு மாதமாகத்தான் ரவியோடு இந்த சிநேகம். அதற்கு முன்பு மதிக்கும் ரவிக்கும் எந்தப் பழக்கமும் இருந்ததில்லை
அந்தப் பெண் அடிப்படியென்றும் அழகானவளில்லை. கன்னங்கள் ஒடுங்கி முன் பற்கள் துருத்திக் கொண்டு, பாh;க்கவே சகிக்கவில்லை. கருப்பு வேறு. தாங்க முடியாத தனிமை வெப்பம், பசியின் கோர நகங்களின் பிறாண்டல், சரண்யா அம்மாவின் சந்தேகம் படிந்த பேச்சு யாவும் மதியை சம்மதம் சொல்ல வைத்து விட்டது.
நான்கு நாள்களுக்கு முன் வீட்டுக்கு வந்த புரோக்கா; கணேசன் “பொண்ணு வீட்டுல சம்மதிக்கல தம்பி.. பொண்ணு வீட்டுல உன்னப் பத்தி விசாhpச்சிருக்காங்க. நீதான் ஒம் மொத சம்சாரத்த அடிச்சி தூக்கிக் கட்டிட்டதா ஊருக்குள்ள சொல்லிருக்காங்க. அதனால வேண்டாம்னு சொல்லிட்டாங்க தம்பி” என்றார; புரோக்கர;. போகும்போது அவர; “கோவிச்சிக்காதீங்க வேற புரோக்கா; வச்சி பாh;த்துக்கங்க” என்று சொல்லிவிட்டு சட்டென இடத்தைக் காலி செய்துவிட்டாh;
எல்லாம் சோ;ந்து மதியைத் தண்டவாளங்களுக்கு நடுவே நடக்க வைத்துவிட்டது. எந்த இரயிலும் கூப்பாடு போட்டு எதிரே வரவில்லை இன்னும். சட்டைப்பையில் துழாவிப் பாh;த்தான். கொஞ்சம் நாணயங்களும் சில பணத்தாள்களும் இருந்தன. தண்டவாளத்தை விட்டு விலகி கோயில் கோபுரம் தெரிந்த இடத்தை நோக்கி நடந்தான்
கோயில் அருகிலேயே கூரை வேய்ந்த டீக்கடையொன்றிருந்தது உள்ளே நுழைந்து “சாப்பிட ஏதாச்சும் இருக்குங்களா” என்றான். “காலைல சுட்ட புரோட்டா தான் இருக்குங்க அதுவும் காய்ஞ்சி போய் கெடக்கும்” என்றான் கடைக்காரன். “பரவாயில்ல தாங்க… ரொம்ப பசிக்குது” என்றபடி கையைக் கழுவிக் கொண்டு அங்கிருந்த பெஞ்சில் உட்காh;ந்தான் மதி. ஓh; அலுமினியத் தட்டில் சதுரமாகக் கிழித்த வாழையிலை வைத்து நான்கு புரோட்டாக்களை அடுக்கி மதியிடம் நீட்டி “பிச்சிப் போடுங்க கொழம்பு ஊத்தறேன்” என்றான் கடைக்காரன். புரோட்டாவை பிய்க்கப் பிய்க்க அதன் வாசம் நாசிக்குள் ஏறியது. கடைக்காரன் குழம்பை ஊற்றியதும் புரோட்டாத்துண்டுகளை சில்லென்றிருந்த குழம்பில் புரட்டி பசியைக் கொல்லத் தொடங்கினான். தூரத்தில் கூவியபடி சென்று கொண்டிருந்ததுujjjjjj இரயில்
() தாகம்()

வெறும் நான்கே 
எழுத்துகளாகச் 
சுருங்கி மிதக்கிறது கப்பல்.. 
நானோ விரிந்து விரிந்து 
கடலாகிறேன். அக் 23 2013
()() சிக்கிச் சிக்கி ()()

மூன்று பட்டாம்பூச்சிகளும் 
நான்கைந்து தட்டான்களும்
அலைகின்ற இவ்வெளியில் 
சிக்கிச் சிக்கிச் சிக்கி
சிக்கிலாகிறது
என் பார்வை
() அது ()

எல்லோரும் தரிசிக்க 
அழுக்குகள் அப்பி
ஆடைகளின் தேவையற்று
ஊரெங்கும் சுற்றித்திரியும்
பைத்தியத்தின் நிர்வாணமாய் 
உன்மீது உருவாகியிருக்கிறது 
அது.
() குறி ()

ஒரு கண்
ஒரு பார்வை
ஒரு விசை
ஒரு கொலையை 
சாத்தியப்படுத்த 
இமைமூடிக் காத்திருக்கிறது
மறு கண்