வியாழன், 19 ஜூலை, 2012

திஸ்தா நதி

             திஸ்தா நதி
வங்காள மூலம்: புத்ததேவ் குஹா
இந்தியில்: சுனிதா சௌரஸியா
இந்தியிலிருந்து தமிழில்: நாணற்காடன்

      ஃப்ளாட்பாரத்திலிருந்து வெளியே வந்ததுமே அந்தக் காலை நேர வெயிலில், வேகமான காற்றில் யோகேனுக்கு திஸ்தா நதியின் வெள்ளத்தைப்போல் பல விஷயங்கள் நினைவுக்கு வரத்தொடங்கின. 
             யோகேனுக்கு எப்போதுமே கிராமம் பிடித்தமானதே இல்லை. இவ்வளவு நாட்களுக்குப்பின் அவனுக்கு திஸ்தா நதிக்கரைக்கு மீண்டும் திரும்பி வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இருந்ததையெல்லாம் திஸ்தா நதிதான் ஒரேயடியாக விழுங்கிவிட்டதே!
           இருந்ததெல்லாம் நெல் விளையும் நிலம் கொஞ்சமும், அவனுடைய அண்ணனும் மட்டும்தான். அவனின் அண்ணன் பெயர் நகேன். நகேன் படிக்காதவன். அவன் நகரத்தின் பக்கமே போனதில்லை. விவசாயத்தைத் தவிர வேறு ஒன்றும் அவனுக்குத் தெரியாது. வெயிலோ, மழையோ கிழிந்த ஒரு குடையை ஏந்திக்கொண்டு  வயலைச் சுற்றிச்சுற்றி வருவான். நகேன் படிக்காதவன் தான். நகரத்தையே பார்த்திராதவன் தான். ஆனால், அவனது தயவால்தான் யோகேன் பி.ஏ., முடித்து, நகரத்தில் ஓர் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறான். அப்பா, அம்மா இல்லாத நிலையில் அண்ணனாகிய நகேன் தம்பி யோகேனைப் படிக்கவைத்து மனிதனாக்கினான்.
              தான் மனிதனானதை நினைக்கும்போதெல்லாம் நகேனுக்கு சிரிப்பு தான் வரும். அவன் படித்த பல்கலைக்கழகம் அவன்மேல் படித்தவன் என்ற முத்திரையைக் குத்தி அனுப்பிவைத்து விட்டது. அவ்வளவுதான். அந்த முத்திரையின் உதவியோடு தனது ஏழைமை என்ற பாவத்தைக் கழுவிக்கொண்டிருந்தான் அவன்.
                 நகேன் உயிரோடு இல்லாததுதான், இன்று அவனை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது. திஸ்தா நதியில் வெள்ளம் வந்த வெகு நாட்களுக்குப்பிறகு, யோகேனின் மெஸ் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது.
                 ப்ரியமுள்ள யோகேன்......
                 தீராத துக்கத்துடன் ஆரம்பிக்கிறேன். உன் அண்ணன் நகேன் இப்போது உயிரோடு இல்லை. எனது நடுப் பையன் ஸ்வப்ன வும் இல்லை. இருவரும் ராக்‌ஷஷி திஸ்தாவின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனர். நாங்கள் எல்லோரும் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை. இப்படி வாழ்வதை விட செத்துப்போயிருக்கலாம் எல்லாரும்.
                  மேலும் உங்கள் வீடு இடிந்து விழுந்துவிட்டது. நிலமும் மணல் நிரம்பி, சேறு மூடி கிடக்கிறது. முடிந்தவரை சீக்கிரமாக ஒரு முறை இங்கே வர முயற்சி செய்யவும்.

                                                                                                      இப்படிக்கு
                                                                                                உன் சித்தப்பா   ஹாரு  
                  பல முறை முயற்சி செய்தும் வரவே முடியவில்லை. பலமுறை யோசித்தான், போய் மட்டும் என்ன செய்வது? அண்ணனும் இல்லை, வீடும் இல்லை, வேறு எதைப் பார்க்கப் போவது? இருந்தாலும் ஏதோ ஓர் ஈர்ப்பினால் வெள்ளத்தின் பாதிப்புகள் ஓய்ந்தபின் கடன் வாங்கிக்கொண்டு பிறப்பிடம் நோக்கிக் கிளம்பினான்.
....................................................................................................................................................................
                   நாட்கள் உருண்டுவிட்டன. இத்தனை நாட்களுக்குப்பிறகும் கூட காற்றில் அழுகிய நாற்றம் பரவிக்கிடக்கிறது. அழுகிய நீரிலிருந்தும், கழுகுகளின் அழுகிய இறக்கைகளிலிருந்தும் வருகிறது இந்த துர்நாற்றம். ஏறக்குறைய ஐந்து மைல் தூரம் நடந்துவந்து கிராமத்திற்குள் நுழைந்த யோகேனுக்கு கிஞ்சித்தும் அடையாளமே தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் தூசும், தும்புமாகவே கிடந்தன. வீடுகள் இருந்ததற்கான அடையாளங்களே இல்லாமலிருந்தன. ஹாரு சித்தப்பாவின் இரண்டடுக்கு மாடி வீடுகூட தென்படவில்லை. மாடுகளின் கழுத்து மணி ஓசை, மரங்களின் நிழல், கன்றுகளின் கூக்குரல், புறாக்களின் சத்தம் என எதுவுமில்லை. பெருகி ஓடும்
மாலைக்காற்று சுடுகாட்டு வழியாக கடந்து போகிறது. காற்று நதியோடு கிசுகிசுத்துப் பேசுகிறது. மணல் புழுதி எழுவதும், அடங்குவதுமாக இருக்கிறது.
                        இந்த வறண்ட பூமியில் தூரத்தில் சில வீடுகளைப் பார்த்தான் யோகேன். அவை பாய்களைக்கொண்டும், இலை தழைகளைக் கொண்டும் வேயப்பட்டிருந்தன. 
                              பெரிய அரசமரமும் இன்னும் சில மரங்களும் வீழ்ந்துவிடாமல் தப்பித்திருந்தன. வீழ்ந்துவிடாத சில சின்ன மரங்கள் சேற்றின் நனைந்து விகாரமாகக் காட்சியளித்தன.
                       ஊர்த்தலைவர் குர்ஷித்தின் வீடிருந்த இடத்தில் மொட்டைப் பனை மரத்தின் கீழே யாரோ குடிசை கட்டி கடைபோல ஒன்றைத் திறந்து வைத்திருந்தனர். பீடி, தீப்பெட்டி, அரிசிப்பொரி, சில காய்ந்த உருளைக்கிழங்கு, பழைய கத்தரிக்காய்கள், பிஸ்கோத்துகள் மற்றும் சில ஈக்களும் மொய்த்துக்கொண்டிருந்தன அந்தக் கடையில்.
                      ஒருவன் சாக்குப்பையை உடம்பில் போர்த்திக்கொண்டு மிகுந்த நம்பிக்கையோடு இடது காதை சுத்தம் செய்துகொண்டிருந்தான். யோகேனுக்கருகில் வந்து கேட்டான் - ‘ எங்கே போக வேண்டும்? யார் நீ?’. யோகேனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் வேறு யாருமில்லை, ஹாரு சித்தப்பாவின் அண்ணன் தாரு சித்தப்பா தான் அவர். கற்பனை கூட செய்ய முடியவில்லை. எப்போது பார்த்தாலும், ஹாரு சித்தப்பாவும், தாரு சித்தப்பாவும் சதுரங்கம் ஆடிக்கொண்டு, ஹுக்கா குடித்துக்கொண்டு இருப்பார்கள். இருவரும் வட்டி வியாபாரம் தான் செய்து வந்தனர். கிராமத்தின் மக்கள்தொகை மிகக் குறைவு தான். இந்த மக்கள் இன்ப, துன்பங்களையும், மான மரியாதையையும் இவர்களிடம் தான் அடகுக்கு வைப்பார்கள். இந்த இருவரும் இந்த மக்களின் இன்ப துன்பங்களைப் பாதுகாத்து வந்தவர்கள். இன்றோ இவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகிவிட்டது.
                     யோகேன் குழந்தைப்பருவத்துப் பழக்கப்படி தனது செருப்புகளைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டான். இதைப்பார்த்து சித்தப்பா தாரு சிரித்தபடியேச் சொன்னார்- ‘கீழே போடு அதை. மரியாதை காட்ட வேண்டிய அவசியம் எதுவுமில்லை. பசிக்குதா? ஏதாச்சும் சாப்பிடுறியா?’
                        யோகேன் ’வேண்டாம்’ என்றான். ‘சரி..போ’ என்றார் தாரு.
                        யோகேன் இரண்டு தப்படி நடந்துவிட்டு அப்படியே நின்றுவிட்டான். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு கேட்டான்,’எங்கே போவது? போவதற்கு எந்த இடம் இருக்கிறது”
                       தாரு எழுந்து நின்றார். இடுப்பை நேராக வைத்து நிற்பது சிரமமாக இருந்தது அவருக்கு. தாழ்ந்த குரலில் பேசினார், ‘நகேன் இப்போது இல்லைதான். ஆனால் எல்லாரும் செத்துவிட்டார்களா என்ன? நேராக போ..அரசமரத்தடியில் ஹாரு இருப்பார்’ என்றார் தாரு சித்தப்பா.
                       யோகேன் சற்று நேர யோசிப்பிற்குப்பின் நடக்கத்தொடங்கினான். புழுதி கிளம்பும், விஷமேறிய காற்று வீசும், அந்த கிராமத்தின் நடுவே நின்றிருக்கும் அரசமரத்தடிக்குச் சென்று சேர்ந்தான்.
                       அவனது தலைக்கு மேல் ஒரு சாதகப் பறவை பீ பீ எனக் கத்திக்கொண்டு அவனையேச் சுற்றி சுற்றி வந்தது. யோகேன் தலையைத் தூக்கி பற்களை நறநறவெனக் கடித்தபடி,’திஸ்தா நதியில் தான் நிறைய தண்ணீர் இருக்கிறதே..அங்கே போய்க் குடிக்க வேண்டியதுதானே’ என்று கடிந்துகொண்டான்.
...................................................................................................................................................................
                        யோகேன் வெகுநேரமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். சூரியன் உதயமாகி வெகுநேரம் கழித்துதான் விழிப்பு தட்டியது அவனுக்கு. நேற்று மாலை பறவைகள் அனைத்துமே செத்துவிட்டதாக தோன்றி இருந்தது அவனுக்கு. ஆனால் இன்று காலையில் தான் எல்லாப் பறவைகளும் செத்துவிடவில்லை என்பதை அவன் உணர்ந்தான். காலை நேர வெயில் அரச மர இலைகளில் மின்னிக்கொண்டிருந்தன. மரக்கிளைகளில் சில மைனாக்கள் அமர்ந்திருந்தன.
                       யோகேன் சித்தப்பா ஹாருவுடன் அரசமரத்தடியில் நெருப்பருகே அமர்ந்தபடி எல்லா விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தான். ஹாரு திஸ்தாவில் வந்த வெள்ளத்தைப்பற்றியும் அதன் கொடூரமுகம் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். தாடியால் நிரம்பிய அவரது முகம் நெருப்பு ஜ்வாலையில் பார்ப்பதற்கு துறவியின் முகம் போல் தோற்றமளித்தது. ‘யோகேன்.. நாங்கள் மறுபடியும் ஒரு முறை சரணாகதி அடைந்துவிட்டோம் என்பதைப் புரிந்துகொண்டாயா?’ என்றார் ஹாரு.
                          யோகேன் பதில் எதுவும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். பூனி சூடான சோற்றுக் கஞ்சியில் உப்பு கலந்து யோகேனுக்கு ஒரு டம்ளர் கொடுத்தாள். பூனியை இதற்கு முன் ஒரேவொரு முறை பார்த்திருக்கிறான். அந்த நாட்களில் ஹாரு சித்தப்பா வீட்டுப் பெண்கள் அவ்வளவு எளிதாகத் தென்படமாட்டார்கள். எப்போதாவது, கிராமத்து திருவிழாக்களில் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும். அந்த நாட்களில், மணற்பாங்கான நதிக்கரை பூக்கும் புற்கள் நிறைந்த வனத்திலிருந்து வருகின்ற காற்று, புறாக்களின் முணுமுணுப்பு, காட்டிலிருந்து வருகின்ற மயிலின் அகவல் என சத்தங்களால் நிறைந்திருக்கும். திஸ்தா நதியின் மேற்பக்கம் நேபாள இடையர்களின் மாட்டுக்கொட்டாய்கள் தென்படும்.
                         பூனி -’ யோகேன், ஒரு நாள் நாம் நீந்தி அக்கரைக்குப் போகலாம். போகலாமில்லையா? உங்களுக்கு பயம் இல்லைதானே? ’ என்று சொன்னாள்.    
                  யோகேன் சிரித்தவாறே,’ உன்னைப்போல் பலஹீனமான பெண்ணால் திஸ்தாவை நீந்திக் கடப்பது முடியாத காரியம். கொஞ்ச தூரம் போனதுமே நீ பயந்து செத்துவிடுவாய்.’ என்றான். பதிலைக்கேடு பூனியும் சிரித்துவிட்டாள். ‘நான் திஸ்தா நதியில் அடித்துச் செல்லப்பட்டால் உங்களை இறுக்கிக் கட்டிக்கொண்டு உங்களையும் இழுத்துச் சென்றுவிடுவேன் என்று எண்ணி விடாதீர்கள்’ என்றாள் பூனி.
                    யோகேன் எதுவும் பேசாமலிருந்தான்.
              வறுத்த அரிசியும், சில இனிப்புகளும் சாப்பிட்டு காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டான் யோகேன்.
                     கிராமத்தின் சிறியவர்களும், பெரியவர்களும் தத்தமது நிலத்தை மறுசீரமைப்பு செய்வதற்காக ஈடுபடத் தொடங்கினர். ஒன்பது மணிக்கெல்லாம் கிராமத்தின் நாலாப்புறமும் வேலையை உற்சாகத்துடன் ஆரம்பித்தனர். எங்கும் உற்சாக ஆரவாரம் கேட்டுக்கொண்டிருந்தது. இந்த உற்சாகத்தை யோகேன் இதற்கு முன் பார்த்ததேயில்லை. யோகேன் எல்லோருடைய முகத்திலும், கண்களிலும் வாழ்வின் மீதான நம்பிக்கை மின்னிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். சோம்பேறி மனிதர்களான இவர்கள், அன்னநடை போடும் இவர்கள், விதியை நம்பி சோம்பித் திரியும் இவர்கள் தங்களுக்குள் இப்படியொரு நெருப்பை மறைத்து வைத்திருந்ததைக் கற்பனை கூட செய்யமுடியாமல் வியந்து நின்றான் யோகேன்.
                  தீருதாஸ் மண்வெட்டியைத் தோளில் வைத்துக்கொண்டு ஓடிவந்தான். ‘என்ன ஆனது மாமா’ என்றான் யோகேன்.
                            தீருதாஸ் திரும்பி-’ ஓ வந்துவிட்டாயா..சரி வேலையை ஆரம்பி..நீயும் ஒரு விவசாயியின் மகன் தானே. இந்த திஸ்தா எங்களைத் தோற்கடிக்க நினைக்கிறது. ஆனால் அப்படி நடக்க விடமாட்டோம் நாங்கள்.’என்றான்.
                         யோகேன் ,’அரசாங்கம் எதுவும் செய்யவில்லையா?’என்று கேட்டான்.
                        ஹாருவின் கூட்டத்திலிருந்து ஒருவன் சொன்னான்,’ அரசாங்கம் செய்யும்போது செய்யும். அதுவரை நாங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா? எங்களுக்கு கை கால் இல்லையா என்ன? திஸ்தா நதி அதையுமா அடித்துச் சென்றுவிட்டது?”
                         மதியம் ஹாருவுடன் எல்லோரும் திரும்பி வந்தனர். மரத்திற்கு கீழே அமர்ந்து முலாம் பூசிய தட்டுகளில் சோறு, வறுத்த கத்தரிக்காய், உப்பு, வெங்காயம் வைத்துக்கொண்டு சாப்பிட்டனர்.
                          யோகேனும் சாப்பிட்டான். நேற்றிலிருந்து பார்த்த யாவும் அவனை மௌனமாக்கிவிட்டது. அழுது வடியும் கண்களோடுதான் கிராம மக்கள் இருப்பார்கள் என்று தான் அவன் நினைத்திருந்தான். ஆனால், இங்கு வந்து பார்த்த பிறகுதான் இந்த மக்களின் கண்களில் கண்ணீரே இல்லை என்பதை உணர்ந்தான். இருப்பதெல்லாம் நெருப்பு மட்டுமே.
                  சாப்பிட்டு முடித்தபின் ஹாரு பூனியைக் கூப்பிட்டு,'சாப்பிட்டிருந்தால் யோகேனை அழைத்து வா’ என்று சொன்னார்.
                 அறுபது வயதான ஹாரு தன் குழுவினரோடு மறுபடியும் கனத்த வெயிலில் நுழைந்தார். யோகேன் கொஞ்சநேரம் மரத்தடியில் குளுமையான நிழலில் உட்கார்ந்திருந்தான். பூனி குடிசைக்குள்ளிருந்து வந்து,’ வாங்க, போகலாம்’ என்றாள்.
                      எழுந்தவாறே ’எங்கே’ என்று கேட்டான் யோகேன்.
                      ’வேறு எங்கே..நம்ம வீட்டுக்குத்தான்’ என்று க்ளுக்கென சிரித்தாள் பூனி.
                இருவரும் சப்தமேதுமற்ற மதிய நேரத்தில் புழுதி கிளம்பும் காற்றோடு நடக்கத் தொடங்கினர்.
                  சிறிது நேரத்திற்குப் பின் பூனி சொன்னாள்,’உங்கள் அண்ணன் நகேன் என்னைக் காதலித்தார்’
                  ’தெரியும்’ என்றான் யோகேன்.
                 வேறெதுவும் சொல்லவில்லை. இதயத்தில் ஒரு வேதனைக் கீற்று ஓடியது.
                கொஞ்ச நேரம் நடந்த பிறகு இருவரும் யோகேனுடைய வீட்டருகே வந்து சேர்ந்தனர். அந்த இடம் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் தெரியத் தொடங்கியது. சரியான இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
                      ’கடுமையான வெயில். நான் இங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து கொள்கிறேன்’ என்றாள் பூனி. ‘சரி..உட்கார்’’ என்றான் யோகேன்.
                      பார்வையை ஓட விட்டான். அழகான முற்றம் இல்லை. கொட்டிக்கிடக்கும் இரவுப்பூக்கள் இல்லை. துளசி மாடம் இல்லை. வறாண்டா இல்லை. கிழக்குப் பக்கத்து அறை இல்லை. எல்லாம் அழிந்துவிட்டிருந்தது. பெரிய வீடு இருந்ததற்கான அடையாளமே துளி கூட இல்லை. சமையலறை மேற்கூரை சேற்றில் சிக்கி ஏதோ விமானத்தின் இறக்கை போல் நின்றிருந்தது. முருங்கைமரத்திற்கு எதுவும் ஆகவில்லை. அதன் இலைகள் பசுமை பூத்திருந்தன. பூனி அந்த மரத்தினருகே அமர்ந்துகொண்டாள்.
                       ’என்ன யோசிக்கிறீர்கள்’ என்றகேள்வி கேட்டு அமைதியை உடைத்தாள் பூனி. ‘ஒன்றுமில்லை’ என்றான் யோகேன்.
                       ‘ ஒன்றுமில்லையென்றால் என்ன அர்த்தம்? எல்லா மனிதர்களும் மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டார்கள். நீங்கள் வெறுமனே பெருமூச்சு மட்டுமே விட்டுக்கொண்டு இருக்கப்போகிறீர்களா?’ என்றாள் பூனி.
                         யோகேன் சிரித்தான்.’அப்படியில்லை.. இதையெல்லாம் நான் யாருக்காக செய்வது? யார் இருக்கிறார்கள் எனக்கு?” என்று கேட்டான் யோகேன்.     
                        பூனி தனது பெரிய கண்களால் யோகேனைப் பார்த்து,’ ஆமாம், சரியாகச் சொன்னீர்கள்..சரி விடுங்கள்..என்னால் ஏதாவது செய்ய முடிகிறதா எனப் பார்க்கிறேன்.’ என்றாள். ‘இரு,இரு.. இந்த வெயிலில் மண்வெட்டியை எடுக்க வேண்டாம்’ என்றான் யோகேன்.
                             பூனி சிரித்தபடி ‘நான் உருகிப்போய்விடுவேனா என்ன? பயப்படாதீர்கள். என்னால் எதுவும் செய்யமுடியும்.’ என்றாள்.
                             சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
                          எங்கிருந்தோ ஒரு ஆந்தை ஜோடி வந்தது. அவை யோகேன் வீட்டு முற்றம் இருந்த இடத்தில் தானியங்களைத் தேடுவதுபோல் பாவனை செய்தன.
                  பூனி சொன்னாள்,’ஆந்தைகள்’. யோகேன் , ‘இவை ஏன் ஜோடியாகவே வசிக்கின்றன’ என்று கேட்டான்.
                 ‘எனக்குச் சொல்லத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?’ என்றாள் பூனி. ‘எனக்கும் தெரியாது’ என்று சொல்லிவிட்டு எழுந்தான் யோகேன்.
                திஸ்தா நதி மறுபடியும் ஒருமுறை திரும்பி வருவதாக கற்பனை செய்து பார்த்தான் யோகேன்.
                 மட்டுப்பட்ட வெயிலில், நீரோடும் சத்தத்தைக் கேட்டவாறு இருவரும் திஸ்தா நதிக்கரையில் நின்றிருந்தனர். இத்தனை துக்கத்திற்கு நடுவிலும், யோகேனுக்கு யாவுமே இனிமையாகத் தெரிந்தது. ‘நதியைக் கடந்து செல்கிறாயா?’ எனக் கேட்டான் யோகேன்.
                   பூனி குழந்தையைப்போல வேகமாகத் தலையை ஆட்டி ஆட்டி , ‘இல்லை இல்லை’ என்று சொன்னாள். அவளது கண்களில் இரு துளி முத்துகள் மின்னின. திஸ்தா நதியின் கர்ஜனைக்கு காது கொடுத்த யோகேன், மறுகரையிலிருந்த வைகுண்டபுரியின் அடர்ந்த காடுகளை இமைக்காமல் பார்த்தான். திஸ்தா அவனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டது. ஆனாலும், திடீரென அவனுக்கு திஸ்தா நதி மிக அழகாகத் தோற்றமளித்தது இப்போது. நன்றியுணர்வோடு மனசுக்குள்ளேயே அவன் திஸ்தா நதிக்கு வணக்கம் சொன்னான்.
                 யோகேனுடைய முகத்தில் புன்னகை ரேகை பரவத்தொடங்கியது. திஸ்தா நதி எல்லாவற்றையும் அழித்துவிட்டு, மீண்டும் இந்த மக்கள் புதிய வாழ்வை வாழ வாய்ப்பை வழங்கி இருக்கிறது என அவன் நினைத்தான்,
                  யோகேனை ஆச்சர்யமாகப் பார்த்த பூனி, ‘என்ன ஆனது? நதியைப் பார்த்து என்ன யோசிக்கிறீங்க.. பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன?’ என்றாள்.
                      யோகேன் பூனியைத் திரும்பிப் பார்க்காமல், நதியைப் பார்த்தபடியே, ‘இல்லையில்லை..எதுவும் யோசிக்கவில்லை.. சரி போகலாம் வா’ என்று அழைத்தான் அவளை.
                     மணற்பரப்பு நிறைந்த பாதையில் இருவரும் உரசியபடி அரசமரத்தடி நோக்கி நடந்தனர். பின்னால் திஸ்தா நதியின் கர்ஜனை மெலிதாகிக்கொண்டிருந்தது. பூனியின் உடலிலிருந்து வியர்வை வாசனை வந்துகொண்டிருந்தது.
                      வியர்வைத்துளிகளின் வாசனை இவ்வளவு அருமையானதா, இதற்கு முன் இந்த வாசனையை யோகேன் அனுபவித்ததில்லை.
                         நடக்க நடக்க யோகேனின் உடலில் தசைநார்கள் திடீரென இறுகத் தொடங்கின. எந்த நம்பிக்கையில் இந்த தசைநார்கள் இறுகிப்புடைக்கின்றன என்பது தெரியவில்லை.
                  நீண்ட காலமாக பேனாவை உருட்டி உருட்டி அவனது கைகள் களைத்து விட்டிருந்தன. அவன் புத்தகத்தை மனப்பாடம் செய்து பி.ஏ. வை முடித்தவன். ஒரு பெரிய அலுவலகத்தில் இயந்திரத்தைப்போல காலையும் மாலையும் அச்சடித்த காகிதங்களில் எழுதி எழுதி நாட்களைக் கடத்திவந்தவன். நரம்புகள் புடைக்கும் கைகளால் அவனால் யாவுமே செய்ய முடியும். மண்வெட்டுவது, ஏர் ஓட்டுவது,  பூனி போல் வியர்வையின் வாசனையில் மூழ்கிக்கிடப்பது, துக்கத்தைக் கண்களில் தேக்கி வைத்துக்கொண்டிருக்கும் பெண்களை இதயத்தால் வருடி குளிரச்செய்வது-என எல்லாமும் முடியும் அவனால். தனது முயற்சியால், தனது உழைப்பால், தனது வியர்வையை பெருகி ஓடச்செய்து தன் கண்களுக்கு முன் புதிய உலகத்தை உருவாக்கிப் பார்க்க வேண்டும். இவை யாவற்றையும் யோகேன் திடீரென உணரத் தொடங்கினான்.
                   இந்த விரிந்த ஆகாயத்தின் கீழ் திஸ்தா நதியின் கர்ஜனையோடு கைத்தட்டிக்கொண்டு ஆட வேண்டுமென்ற ஆசை எழுந்தது அவனுக்கு. இந்த சந்தோசத்தில் அவன் கொஞ்ச தூரம் ஓடவும் செய்தான்.
                      ‘என்ன ஆனது? நில்லுங்கள்..ஓடாதீர்கள்..பசிக்கிறதா..ஆனால் கைவசம் சாப்பிட எதுவுமில்லை’ என்றெல்லாம் பூனி சத்தமிட்டாள்.
                       இதைக்கேட்டு யோகேன் நின்று விட்டான்.
                        வெகுதூரம்வரை வறண்ட பூமி விரிந்து கிடந்தது. யோகேனின் கண்கள் எரியத் தொடங்கின. இந்த வறண்ட பூமியை மறுபடியும் பசுமையாக்கிப் பார்க்க வேண்டுமென அவன் மனசுக்குள் முடிவெடுத்தான். பூஞ்செடிகள், நிழல் தரும் மரங்கள் நட வேண்டும். கன்றுக்குட்டிகளை நடனமாட வைக்க வேண்டும். புறாக்களை அழைத்து வர வேண்டும். எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
                      வியர்வையில் நனைந்திருந்த பூனியின் உள்ளங்கைக்குள் தனது கையை வைத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டான். அவளது கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான். அவனது நீல நிறச் சட்டையும், பூனியின் கறுப்பு நிறச் சேலையும், பூக்கும் புற்கள் காற்றில் அசைந்தாடுவதைப் போல் திஸ்தா நதியிலிருந்து வந்த காற்றில்அலையாடின.
                       அவர்களது தலைக்கு மேல் ஜோடிப்புறாக்கள் சிறகடித்தவாறு திஸ்தா நதியை நோக்கி பறந்து சென்றன.
                

       

கருத்துகள் இல்லை: