புதன், 18 ஜூலை, 2012

தனிமையின் பாதம்

என் ஆள்காட்டி விரல்பற்றி
பனிவெடிப்புகள் காணாத பாதங்களை  முன்வைத்து 
நடை பயில்கிறது தனிமை

எவ்வளவுதான் உதறினாலும்
விட்டுவிலகாமல்
தேள் கொட்டிய வலியாய்
விரலைக் கவ்விக்கொண்டு
குழந்தையின் குதூகலத்தைச் சுமந்தபடி
தளிர் நடையிடுகிறது அது

எதிர்ப்படும் யாவரும்
நான் தந்தைமைக் கண்டுவிட்டதாக
கருதிவிடுவார்களோ
என்ற பதற்றத்தைத் தணிக்க
பாதைகளற்ற
வீதிகளைத் தேடியலைகிறேன்

இப்போதெல்லாம்
பலூன்கள் நிறைந்த வீதிகளைக்
கடந்து செல்லமுடியாமல் திரும்புதல்
பழக்கமாகி வருகிறது

என்னை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வதெனத் தெரியாமல்தான்
இன்னும் வெட்டாமலிருக்கிறேன்
எனதிந்த ஆள்காட்டி விரலை


கருத்துகள் இல்லை: