நானாகியவைகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நானாகியவைகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜூலை, 2012

நீயும், குடையும்

1. குடையைப்
பிடித்திருக்கிறாய் நீ

குடைக்குப்
பிடித்திருக்கிறது
உன்னை

2. மழையிலா?
வெக்கையிலா?
எப்போது விரிப்பாய்
உனது கைப்பைக்குள்
இருக்கும் குடையை

3. மடக்கி வைத்த
குடையின் கைப்பிடியில்
ஒட்டியிருக்கும்
உள்ளங்கை ரேகைகள்
உனது இறுக்கத்தைக்
காட்டுகின்றன

4. கண்களிடமிருந்து தப்பித்து
உனது தலைக்குமேல்
கம்பீரமாய் நிற்கிறது
குடை

பார்வையிலிருந்து தப்பமுடியாமல்
உனது பாதங்களில் விழுந்துகிடக்கிறது
அதன் நிழல்

5. பூப்போட்ட

அந்தச் சின்னக் குடைதான்
மழை ஊசிகள்
உன்னைக் குத்திவிடாமல்
காப்பாற்றுகிறது









நீயும், நத்தையும்

1. இந்த ஓராயிரம் மலைகளில்
கடைசி மலையின் உச்சியில்
நீ இருக்கிறாய்
என்பதறியாத நத்தையொன்று
உன்னைத்தேடி
முதல் மலையில்
ஊர்ந்தபடி
ஏறத்தொடங்கியுள்ளது

2. விரல்களால் முத்தமிடுவாயென
உணர்வுக்கொம்புகளை
நீட்டிக்கொண்டிருக்கிறது
மருதாணிச்செடியில்
ஒரு நத்தை

இலை பறித்துக்கொண்டிருக்கும்
உனது பத்து உதடுகளும்
சிவக்கப்போகிறது
சற்று நேரத்தில்

3. உன்னெதிரே
ஊர்ந்து வருகிற நத்தையைப் பார்க்க
தலைகுனிந்து
வெட்கத்தைத்
துணைக்கு அழைத்துக்கொள்கிறாய்

4. சூரியக் கதிர் சுடும்போதெல்லாம்
உனது நினைவுக் கூட்டுக்குள்
சுருண்டு கொள்கிறது
அந்த நத்தை

5. குடிப்பெயர்ச்சியாகி
போகிறாய் நீ
வேறு வீட்டிற்கு

இடப்பெயர்ச்சியாகி
போகிறது நத்தை
அதே கூட்டோடு

திங்கள், 9 ஜூலை, 2012

நீயும், கடிகாரமும்

1. உன்னை மையப்புள்ளியாகக் கொண்டு
முட்களை முடுக்கிவிட்டிருக்கிறது
கடிகாரம்
முட்களின் முனைகள்
காலமாகிக்கொண்டிருக்கின்றன

2. மணி பார்ப்பதாய்ச்சொல்லி
அடிக்கடி மணிக்கட்டில்
பார்த்துக்கொள்கிறாய்
உனக்காகவே துடித்துக்கொண்டிருக்கும்
இன்னொரு இதயத்தை

3. ஓடாமல்
மௌனமாய் நின்றிருக்கிறது
கடிகாரம்

உனது விரல்களுக்கு
எந்த நொடியில்
கற்றுத் தரப்போகிறாய்
கடிகாரத்தை முடுக்கிவிட

4. நீ இறந்த காலமா
எதிர்காலமா
என்றறியாத கடிகாரமொன்று
முட்களைச் சுழற்றிக்கொண்டிருக்கிறது
நிகழ்காலத்தைக் காட்டிகொண்டு

5. நீ கொடுத்த
முட்களைக் கொண்டுதான்
மணிகாட்டிக்கொண்டிருக்கிறது
கடிகாரம்

நீயும், பலூனும்

1.கையில் பலூனோடு
திருவிழாவையே
வாங்கி விட்ட
மகிழ்ச்சியோடு செல்கிறாய்

2. தளர்ந்துகிடந்த பலூன்
நீ ஊத ஊத
விரிந்து விரிந்து
இறுகிக்கொள்கிறது

3. உன் பிரிவின்
கோடைக்காலமிது

வெப்பத்தால்
காற்று விரிவடையுமென்பது
தெரியுமா உனக்கு?

4. வெடித்துவிடுமென்ற அச்சத்தில்
கையிலேயே வைத்திருக்கிறாய்
பலூனை

ஊதுவாயென நம்பி
உனது உதடுகளையேப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
அது

5. உனது நுரையீரல் தீண்டிய
காற்றைச் சுமந்தபடி
உயரமாகிக்கொண்டிருக்கிறது
நீ நழுவ விட்ட
பலூனொன்று

நீயும், வயலும்

1. உனது கண்கள் நாற்று நட்ட
வயலின் விளைச்சலைச் சேமிக்க
பத்தாயம் இருக்கிறதா
உன்னிடம்?

2. ஆழ உழுதன
உனது பார்வைகள்

நீர் பாய்ச்சின
உனது கண்கள்

விதை தூவின
உனது உதடுகள்

களை பறித்தன
உனது கைகள்

வயலானது
நிலம்

3. உனது காலடிச் சத்தம் கேட்டு
வளைக்குள் பதுங்கிக் கொள்கின்ற
அந்த நண்டுச் சொற்கள்
நீ திரும்பிப்போனபின்
வயல் முழுக்க
ஊர்ந்து விளையாடுகின்றன

4. கறுப்பும் வெளுப்புமாய்
உனது முகத்தில்
எப்போதுமிருக்கின்ற
அவ்விரு ஆடுகளைக்கொண்டே
நலம் விசாரிக்கிறாய்
இந்தப் பசுமையான வயலை

5. நீ துரத்தி வந்த தும்பி
நீர்தேங்கிய வயல் மேல்
பறக்கிறது இப்போது

உனது கால்கள் தயங்கி நிற்க
உடைந்து சிதறமுடியாத வருத்தத்தில்
உறைந்து கிடக்கிறது
வயல் நீரில் வானம்

நீயும், மரமும்

1. எப்போதாவது
நிழல் தேடுவாயென
உனது பாதையில்
வெகு நாட்களாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
ஒரு மரம்

2. உனது கரிவளியை
வாங்கிக்கொண்டு
தனது உயிர்வளியை
வழங்கிக்கொண்டிருக்கிறது
மரம்

3. உனது கண்கள்
வீசியெறிந்த விதை
எல்லாருக்கும் நிழல் தரும்
மரமாகிவிட்டதென்பதை
அறிவாயோ நீ?

4. சாய்ந்தது மரம்

தோள் கொடுத்து
சாய்ந்தாய் நீ
மரத்தின் மீது

உனது தோள் வாங்கி
சாய்ந்தது மரம்

5. கனிந்த பழங்களோடு
காத்திருக்கிறது மரம்

உன் முன்
ஒரே ஒரு ஏணியும்,
ஒரு நூறு கற்களும்

ஏறினாலும்
எறிந்தாலும்
பழத்தோடுதான்
திரும்புவாய் நீ

நீயும், குளமும்

1. நீ பொரிபோட்டு
வளர்த்த மீன்களைப்
பொத்திப் பொத்தி
வளர்க்கிறது குளம்

2. சதுரக்குளத்தின் நடுவே
கல்லெறிகிறாய்

வட்டமாகவேப் பரவுகின்றன
எல்லா அலைகளும்

3. கடைசிப் படிக்கட்டில்
அப்பியிருக்கின்றன
நீ அரைத்துப்பூசிய
மஞ்சளின் துணுக்குகள்

அருகிலிருந்தும்
கலக்க முடியாத தவிப்பில்
அலைகிறது
குளத்து நீர்

4. பசித்த மீன்களுக்கு உணவாய்
உனது முக நிலவு

கூடும் பசியுடன்
குறையாத நிலவோடு
நீள்கிறது இவ்விரவு

5. குளித்து முடித்து
ஏறிச்செல்லும்போது
படிக்கட்டுகளில்
உனது ஈரச்சுவடுகள்

நீ குளத்தை விட்டு
நீங்கியதற்கான
அடையாளங்கள்
அவை

நீயும், புறாவும்

1. உனது கண்கள் வீசும் இரையைக்
கொத்தித் தின்ன
 உனது வாசலில்
காத்திருக்கிறது
ஒரு புறா

2. சிறகுகளிருந்தும்
பறந்து போகாமல்
உன் பாதங்களை
முத்தமிட்டபடி கிடக்கிறது
உன்னால் கவனிக்கப்பட்டு
உன்னால் பராமரிக்கப்பட்டு
உன்னால் வளர்க்கப்பட்ட
புறாவொன்று

3. நீ தொட்டுத் தடவும்பொழுதெல்லாம்
சிலிர்த்துக்கொள்கிற
அந்தப் புறாவிடம் தான்
விசாரிக்க வேண்டியுள்ளது
உனது விரல்களைப் பற்றி

4. இந்தப் புறாவின்
சிறகுகளுக்கு வானம்
அலகுகளுக்கு பூமி
இளைப்பாறுதலுக்கு மரம்
இருப்பதற்கு
உனது புறாக்கூண்டு

5. உனது காலடிச்சத்தம் கேட்டும்
பறக்காமலிருக்கிறது
ஒரு புறா

பறக்காமலிருப்பதைப் பார்த்தும்
பிடிக்காமலிருக்கிறாய்

நீயதை

நீயும், எறும்பும்

1. குளித்த பின்
ஈரத்தலையோடு வருகிறாய்

தரையில் சொட்டிய
ஒரு துளியில்
முகம் பார்க்கிறது
ஓர் எறும்பு

2. பனிக்கால இரவில்
உன் உள்ளங்கைச் சூட்டில்
குளிர் காய்ந்து  கொள்கிறது
அந்த எறும்பு

3.அண்ணாந்து பார்த்தும்
உன் முகம் பார்க்க முடியாத
ஏமாற்றத்தில்
இறக்கை வளர்க்கிறது
அது

4. அரிசி மாவில் நீயிட்ட
கோலத்திற்காக வருகின்றன
ஏராளமான எறும்புகள்

கோலமிடும்
உன் கோலத்தைக் காண
காத்திருக்கிறது
ஒற்றை எறும்பு

5. பூங்காவில்
சறுக்கல் விளையாடுகின்றன
குழந்தைகள்

புல்வெளியில் அமர்ந்து
ஊன்றியிருந்த
உன் கைவிரல்களில்
ஏறிச் சறுக்கி விளையாடுகிறது
ஒரு எறும்பு