திங்கள், 10 மார்ச், 2014

படரும் வெளி

கொடியெனப் படர்ந்திருக்கும்
தனிமையின் இலைகளில்
எறும்புகள் ஊர்வது
அதிசயமில்லை
 
பற்றிக்கொள்ள
என்னைத் தவிர எதுவுமில்லை
என்றான பின்
பின்னிப் பிணைத்துக்கொள்ளும் பேரன்பு
சுரந்து வழிகிறது பகல் முழுதும்
இரவிலும் கூட....

விரிந்த கிளைகளில்
மலர்ந்த கூடுகளில்
குஞ்சுகளின் கிசுகிசுப்புகளும்
அந்தியில் பறவைகளின்
கீச்சொலிகளும்
வானத்தைக் குளிப்பாட்டுகின்றன

நகர்தலை சாத்தியமற்றதாக்கிவிட்ட
வேர்கள்
நகர்தல் அர்த்தமற்றதெனவும்
சொல்லிக் கொண்டிருக்கின்றன




உன் முத்தமானாலும்
அது உனக்கீடானதில்லை
என்பதான
ஒரு மழைத்துளி
உன் கடைசி நேர
கையசைப்பிலிருந்து
பொழிந்தபடியிருக்கிறது

ஞாயிறு, 9 மார்ச், 2014

அஃதில்லை அது

()()()()() அஃதில்லை அது ()()()()()

ஒரு ஞாபகம்
ஏழு வண்ணங்களோடு
வளைந்திருந்தது

ஒரு ஞாபகம்
சின்னச் சின்னத் துளிகளாகப்
பொழிந்தது

ஒரு ஞாபகம்
வயற்காட்டுக் குருவிகளை
பயமுறுத்தியது

ஒரு ஞாபகம்
வெறி பிடித்துக்
கடிக்கத் துரத்தியது

ஒரு ஞாபகம்
நடுநிசியில்
பாத்திரங்களை உருட்டியது

ஒரு ஞாபகம்
புல் நுனியில்
உட்கார்ந்திருந்தது

ஒரு ஞாபகம்
தவளையின் கூக்குரலுக்கு
வளைந்து வளைந்து ஊர்ந்து சென்றது

ஒரு ஞாபகம்
உதிரும் சருகிலைக்கு
இறுதி வணக்கம் செலுத்தியது

ஒரு ஞாபகம்
ஞாபகத்தின் ஊரிலிருந்து
வெளியேறியது

குளிரின் மரணம்

()()()()() குளிரின் மரணம் ()()()()()

ஏ.ஸி ரிப்பேர் செய்பவனாக
இன்றைய நாளை
வாழ்ந்து முடித்துவிட்டேன்

குளிர், மழை, பனி பற்றிய
எந்தப் பேச்சும்
இன்றெனக்கு
பெரும் வெக்கையாக இருந்தது

தர்பூசணிப் பழங்கள் அறுத்து
துண்டாடிச் சிவந்த
பகலைக் கண்டு
வெட்கிப்போனேன்

வீதியில் மணியெழுப்பிப் போன
ஐஸ்காரன்
கொல்லப்படாமல்
என்னிடமிருந்து தப்பிப் போனான்

நீ நெருக்கித் தைத்துக் கொடுத்த
ஸ்வெட்டருக்குள்
ஒளிந்திருந்த காதலை
அணிந்துகொள்ள
முடியாமலாயிற்று

குடை விரிக்கும் பதைபதைப்பென
எதுவுமில்லாததையெண்ணி
மிகவும் பதைபதைத்துப் போனேன்

அவ்வளவு எளிதாக
தேநீர் மறுத்து
வியப்பிலாழ்ந்தேன்
என்னை நானே

நெற்றி வழிந்த வியர்வையை
விரல் வழித்து
சுண்டிவிட்டபோது
சில்லிட்டிருந்தது
அந்த அறை

பைன் ஆப்பிள் என்னும் அவன்

)()()()() பைன் ஆப்பிள் எனும் அவன் ()()()()()

நீங்கள் அவனுக்கு
பைன் ஆப்பிள் எனப் பெயர் சூட்டி
பைனாப்பிள் என விளித்ததும்
பைன் ஆப்பிள் ஆகி விடுகிறான் அவன்

உங்களின் குரல் திசை வழியில் நடந்து
உங்களை வந்தடையும் போது
அவன்
அழுகிப்போவதிலிருந்து
தப்பித்துக் கொள்கிறான்

காற்றின் பெருவெளியில்
அதிகாரத்தின் கூர்மை பூசிய
ஒரு சொல்லைக் கொண்டு
அவனது சொரசொரப்பான மேல்த்தோலைச்
சீவி விடுகிறீர்கள் நீங்கள்

இப்போது
மஞ்சள் நிறச் சாம்பலாக
இருக்கும் அவன்
உண்ணத் தகுந்தவனாகிறான்
உங்களுக்கு

வட்டமாக அல்லது நெட்டையாக
உங்கள் விருப்பப்படி
அவனைக்
கூறு போட்டுக் கொள்கிறீர்கள்

துண்டுகளாகிவிட்ட
அவன் மேல்
மிளகாய்ப் பொடியைத் தடவும்போது
உங்கள் நாவில்
எச்சில் சுரப்பதைத் தடுக்கவே முடியாது

சாறு வழிய
அவனைத் தின்று தீர்த்தபடி
உங்கள் பயணத்தைத் தொடர்கிறீர்கள்

நீங்கள் நுகராதபோதும்
கழுவிக்கொண்ட
உங்கள் கைகளிலிருந்து
வாசனையாய்க் கசிந்துகொண்டிருக்கிறான்
பைன் ஆப்பிள் என்னும் அவன்
()()()()() பிதுக்கப்படாத பற்பசை ()()()()()

என்
ஜன்னல் கிராதியில்
நீ மறந்து வைத்துவிட்டுப்போன
நினைவொன்று உட்கார்ந்திருக்கிறது

ஆயிமாயிரமாய் முளைத்திருக்கிற
அதன் பற்கள் யாவும்
பாதிக்குமேல் தேய்ந்து போயிருக்கின்றன

இவ்வளவு நாளாக அது
உன் அழுக்குகளைக் கொப்பளித்துத் துப்ப
பேருதவியாக இருந்திருக்கக் கூடும்

மறுபடியும் நீ அழுக்கேறியதை
உணர்ந்த கணத்தில்
நினைவுக்குத் திரும்பி
உனதறைகளில் தேடியிருப்பாய்
இந்த நினைவை

ஒரு குறுஞ்செய்தியில் நான்
உனக்கு உறுதிபடுத்திவிட்டேன்
இந்த நினைவைப்பற்றியும்,
அது என் ஜன்னல் கிராதியில்
உட்கார்ந்திருக்கும் அழகுபற்றியும்..

மறுமுறை நீ
வரும்வரை அழுக்குகளின் கனவின்
பசித்திருக்கும் அதை
பத்திரப்படுத்தி வைக்கும்
பெரும் பொறுப்பில்
அழுக்காகிக் கொண்டிருக்கிறேன்
இப்போது நான்

பிப்  22 2014

சருகுகளின் மலை

()()()()() சருகுகளின் மலை ()()()()()

சென்ற முறை
உனக்குள் நான் பயணப்பட்டபோது
இவ்வளவு சருகுகள் இருக்கவில்லை

உனக்கென கருகொண்டு
என் தோளுரசி கொஞ்சிப் போன
மேகத்தின்
வெவ்வேறு முகங்களில்
ஒன்று கூட தென்படவில்லை
இப்போது

சோம்பல் மிகுதியில்
இணையின் தலை கோதி
கூடிக் களித்த மந்திகள்
உன் பிளந்த நிலத்தில்
ஒரு சோற்றுப் பொட்டலத்திற்காய்
ஓடிக்கொண்டிருக்கின்றன

கூடுகள் தெரியுமளவிற்கு
வற்றிப்போன வேங்கை மரத்தின்
அடிவேரில்
என் இளைப்பாறுதல்
தாகத்தின் நிழலற்று பரிதவிக்கிறது

ஒலிகளால் உன்னை நிரப்பிய பறவைகளின்
மெல்லிறகுகள்
காற்று வெளியில் பறந்து திரிவதைக் கண்ணுற்று
சர்க்கஸ் கூடார கைத்தட்டல்களைச் சிந்துகிற
வெடித்த மனம் வாய்க்கவில்லை
எனக்கின்னும்

கீழிருந்து கொண்டுவந்த
தண்ணீர் பாட்டிலின் மூடி திறந்து
மேலிருக்கும் உன் பூமியில் கொட்டும்போது
உண்டாகும் இவ்வோசையைக் கேட்டு
ஏமாந்துவிடாதே

இது மழையில்லை

காதல்

இந்த வெளிச்சம் 
உன் மீதான காதலை
நிறைவேறாத அன்பை
தெளிவான நேசத்தை
சின்னஞ்சிறு பிரியத்தை
எங்கும் பரவிய 
இருளென காட்சிப்படுத்துகிறது
ஜன் 15 2014
-------

நீ 
கடிதமெழுதியிருக்கிறாய் எனக்கு. 
அது காதலை சுமந்து வந்திருக்கிறது. 
எழுத்துகள் யாவும் 
முத்தங்களாயிருக்கின்றன.
இப்படிக்கு எனுமிடத்தில் நீ இருந்தாய். 
அன்புள்ள எனுமிடத்தில் நானிருந்தேன்.
முகவரி எழுதுமிடத்தில் 
அரசாங்க முத்திரையிருந்தது. 
கடிதமோ கிழிந்திருக்கிறது.
ஜன் 6 2014
-----------
 தொங்கும் 
தண்டவாளத் துண்டு 
மணியொலிக்க, 
ஆரவாரமாகிற ஓர் அந்தி, 
உன்னைப்போலவே இருக்கிறது

அவள் பற்றி

மறுபடியும் கவிதை எழுதும் ஆசையை
புது உண்டியல் போல
எடுத்து வைத்திருக்கிறேன்.
அதன் வாயில் காதலைத் தான்
முதலில் போடலாம் என்றிருக்கிறேன்.
சில்லறைக் காசுகளின் சத்தத்தைப்போல
காதலையும் பெருஞ்சத்ததோடு
அள்ளித் தர நீ வேண்டும்.
நீ யார்? எங்கிருக்கிறாய்?
அல்லது செத்துவிட்டாயா?
எதுவும் தெரியாமல்
இந்தப் பொழுது எரியும் கானகமாகி
என்னை அதற்குள் தள்ளிவிட்டிருக்கிறது.
உண்டியலை உடைத்துவிடலாமென்றாலும் நாணயங்களற்ற
உண்டியலை உடைத்தென் செய்வது?
காதலையும், காதலியையும்
ஒருங்கே பார்த்தவர்கள்
எவரேனும் இங்குண்டா?
இருப்பின் வந்து விசாரித்துவிட்டுப்போங்கள் முகவரியற்ற அவளைப்பற்றி

கவிதை சைக்கிள்

இன்று அதிகாலை பனியினூடே
இமைபிரிக்கும்போது
என் மிதிவண்டியின் பூட்டை
உடைத்துக்கொண்டிருந்தது கவிதை

மறுபடியும் இமைகளை
மூடிக்கொண்டு விழித்திருந்தேன்

களவாடும் அதன் முயற்சிக்கு
இசைந்துகொடுத்து
சின்னச் சின்ன க்றீச்சிடுதலால்
என்னையும் உசுப்பியது மிதிவண்டி

உறங்குவதான எனது நடிப்பு
கவிதைக்குத் துணைசெய்ய
க்ளிங் க்ளிங் என மணியடித்தபடி
மிதிவண்டியை நகர்த்தியது அது

சூரியன் வந்த பிறகு
போர்வை விலக்கி
பற்கள் துலக்கி
முகம் கழுவி
தேநீர் அருந்தி
செய்தித்தாள் வரை
வந்து சேர்ந்தேன்

என் மிதிவண்டியில்
எங்கேயோ பயணப்பட்டுக்கொண்டிருக்கும்
அந்தக் கவிதையைப் பற்றி
எந்தச் செய்தியும் இல்லை
இந்தச் செய்தித் தாளில்

கவிதை விளையாட்டு

என்னுடன் விளையாட வருமாறு
அழைத்தது கவிதை

மறுப்பதற்கு காரணமேதும் அகப்படவில்லை
மட்டுமின்றி
விளையாடும் பருவம்
இன்னும் முடிந்துவிடவில்லையெனக்கு

ஐந்து கற்களைப்
பொறுக்கித் தந்தது
கவிதை

ஐந்து சொற்களைப்
பொறுக்கித் தந்தேன்
நான்

சொற்களை தன் தலைக்குமேலே
வீசிப்பிடித்து விளையாடி
இப்படித்தான் விளையாட வேண்டுமென்று கற்றுக்கொடுத்தபடி விளையாடியது
கவிதை

நானும் கற்களை
வீசிப்பிடித்து விளையாடத் தொடங்கினேன்

ஆட்டம் முடிந்த பின்
என் உடல்
காயங்களால் நிரம்பியிருந்தது

கவிதை
மற்றுமொரு
கவிதையாகி இருந்தது

நான் தோற்றிருந்தேன்
கவிதை வென்றிருந்தது

ஹாக்கி

வெறும் காதலாகத்தான் 
இருந்தது அது. 
மழைத்துளிகளாலும், 
வெயிற்கீற்றுகளாலும் 
கொஞ்சங்கொஞ்சமாக 
வானவில்லாக்கினேன். 
இந்த வண்ணங்கள் 
எங்கிருந்து வந்ததென 
நானறியேன்
--------
 
ஹாக்கி மட்டையின் வளைந்திருக்கும் 
பகுதிதான் வாழ்க்கையோ? 
எந்தப் பந்தை அடித்து 
எந்த வலைக்குள் வீழ்த்தப் போகிறோம்? 
பந்து நம் கையில் இல்லாவிட்டாலும் 
ஓடுவதை நிறுத்திவிடவா முடிகிறது? 
ஆட்டம் முடிந்துவிட்டதை 
அடையாளப்படுத்த ஊதப்படும் 
கடைசி விசில் சத்தம் யாரிடம் இருக்கிறது? 
விளையாட ஆளில்லாத 
வெற்று மைதானத்தின்
மிக நீண்ட தனிமையும்,
ஆழ்ந்த மௌனமும் 
தேவைப்படுவோர் யாருளர்?
ஜன 19 2013
வாழ்ந்த வீட்டை 
விற்க வேண்டிய அவலத்தால் 
சுருங்கிய அவனை
நில புரோக்கராக 
விரிய வைக்கிறது காலம்
மார்ச் 25 2013
---------
நடந்த கொலைக்குச் 
சாட்சியமாயிருக்கும் 
இக்கோழியிறகு 
காது குடையவும் 
தோதாயிருக்கிறது
--------
இன்றென் 
வீட்டுச் சுவரில் 
தத்தித்தத்திப் போக்குக் காட்டி 
பறந்துசென்ற 
சிட்டுக்குருவியிடம் 
சொல்ல முடியாமற்போன 
சோகத்தைத்தான் 
நாள்முழுதும் 
கொத்திக் கொண்டிருந்தேன் 
மார்ச் 20
----- 

தேவகிருபை

நகரத்தைத் தாண்டி நதிக்கரையில் அந்தச சிறிய கோயில் இருந்தது. பிரகாரச் சுவர்கள் நாலாப்புறமும் உயரவுயரமாக இருந்தன. வலது சுவரையொட்டிச் செல்கிற அந்தச் சாலை மரங்களடர்ந்த புதருக்குள் ஒளிந்துகொள்கிறது. சாலையின் மறுபக்கம் சில பெஞ்சுகள் போடப்பட்டிருக்கின்றன. அந்தி மசங்கும் நேரத்தில் கோயிலுக்கு வரும் மக்கள் பெஞ்சுகளை நிரப்பிவிடுவார்கள். பெஞ்சுகளையொட்டி இரண்டு மரங்கள் இருந்தன. அதற்கும் சற்றுத் தள்ளி கருவேலம் புதர்.
அந்த மரங்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய உருவம் கொண்டு அடர்ந்திருக்கவில்லை. இருவர் மட்டுமே உட்கார்ந்துகொள்ளும் அளவிற்கு சிக்கனமாக நிழல் தந்தன அவை. அந்த மரத்தடியில் தான் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். இருவரும் தம்முன் அலுமினியத் தட்டு வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே ஆளுக்கொரு இரும்பு வாளி இருக்கும். இருவரும் இடுப்பில் கந்தலாய் வேட்டியைச் சுற்றியிருப்பார்கள். இருவருக்கும் உருவத்தில் நிறையவே வித்தியாசமுண்டு. தன்னா எலும்புந் தோலுமாக, கலைந்த தலைமுடியோடு இருப்பான். அவனது அம்மைத் தழும்புகளால் விகாரமாக இருக்கும். ஏதோ விசித்திர நோயால் பீடிக்கப்பட்டு அவனது உடல் முழுக்க சிவந்த கொப்பளங்களும், காயங்களுமாக இருக்கும். கழுத்து, வயிறு, உள்ளங்கால்வரையிலும் சீழ்வடியும் காயங்களும், இரத்தம் வடியும் கொப்பளங்களுமாய் பார்க்கவே அறுவெறுப்பாயிருக்கும் அவனது தோற்றம். ஆனால், பக்தியோடு கோயிலுக்கு வருபவர்களுக்கு அவனது தோற்றம் அறுவெறுப்புக்கு பதிலாக பரிதாபத்தையே உண்டாக்கியது. அந்த பரிதாபம் அவனது அலுமினியத் தட்டில் சில்லறைகளாக மாறியது.
ஆனால், பிர்ஜீவின் நிலைமையோ வேறு. பார்க்க கொழுகொழுவென்று இருந்தான். வேட்டிக்கு மேல் கட்டுக்கோப்பான உடம்பு; உப்பிய கன்னங்கள். அவனது தோற்றம் பரிதாபத்தை உண்டாக்கக் கூடியதாக இல்லை. ஆனாலும், தன்னாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதால் பிர்ஜீவிற்கும் ஏதாவது கிடைக்கும். காயமும், தழும்புகளும் கொண்ட கோரமான உடம்புக்குத்தான் இங்கே மதிப்பு. தன்னாவின் தட்டை விட பிர்ஜூவின் தட்டு குறைவான வருமானத்தையே பெற்றுத்தருகிறது. சொல்லப்போனால் பிர்ஜூவின் தட்டு பெரும்பாலும் உதாசீனங்களால் தான் நிறைகிறது. பிர்ஜீவின் உடம்பில் எந்தக் காயங்களும், தழும்புகளும் இல்லாதது தான் இதற்குக் காரணம் போல.
தன்னாவைப் பார்த்து யாரும் பரிதாபப்படாமல் இருக்க முடியாது. அதிலும் பெண்கள் தன்னாவைப் பார்த்துவிட்டால் உருகிப் போய்விடுகிறார்கள். ஆனால் தன்னாவின் வாழ்க்கை நிலையோ முற்றிலும் வேறானது. காயங்களையும், கொப்பளங்களையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தன்னாவின் வாழ்க்கை செழிப்பு மிக்கதாகவே உள்ளது. போதுமான அளவுக்கு தன்னாவுக்கு உணவு கிடைத்துவிடுகிறது. அது மட்டுமா? அவனது அலுமினியத்தட்டு அவனுக்கு மது குடிக்கவும், கஞ்சா குடிக்கவும் தேவையான வருமானத்தையும் பெற்றுவிடுகிறது. பிர்ஜூவின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. பல நேரங்களில் பட்டினி தான்.
இந்த இரண்டு பிச்சைக்கார்களின் உலகமும் மிகவும் சிறியது தான், எனினும் அவர்களது தொழிலில் போட்டி உருவாகிவிட்டது. அது நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவிட்டது. தன்னாவின் சீழ்வடியும் காயங்களும், கொப்பளங்களும் அவனுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. ஒரு நடிகை தனது அழகை எண்ணி கர்வம் கொள்வதுபோல, தன்னா தழும்புகளும், காயங்களும் கொண்ட தனது உடலை நினைத்துக் கர்வம் கொண்டிருந்தான். தன்னாவின் உடம்பிலிருக்கும் கொப்பளங்களை நினைக்கும்போதெல்லாம் பிர்ஜூவுக்கு பொறாமை பொங்கி வழிந்தது. அழகே இல்லாத யுவதியொருத்தி, அழகு தேவதை ஒருத்தியைக் கண்டு வெறுப்பது போல பிர்ஜூவுக்கு தன்னாவின் உடம்பின் மீது வெறுப்பு குடி கொண்டுவிட்டது.
நாளுக்கு நாள் இந்த வெறுப்பு பிர்ஜூவைப் பாடாய்ப்படுத்தியது. தன்னாவின் அலுமினியத்தட்டில் விழும் ஒவ்வொரு நாணயமும், பிர்ஜூவின் மேல் ஈட்டியாய் இறங்கியது. நாணயம் விழும் சத்தம் ஒவ்வொன்றும் பிர்ஜூவின் இதயத்தை குண்டு விழுந்ததைப் போல உலுக்கியது.
எப்படியாவது தன்னாவை விட அதிகமாக பிச்சையெடுத்து வருமானத்தைப் பெருக்க வேண்டுமென்ற பேராசையில், கோயிலுக்கு வருபவரின் மனத்தைக் கரைக்கும்படி வலியால் துடிப்பது போல நடிப்பது… என பலவிதத்திலும் முயற்சிகள் செய்துவிட்டான் பிர்ஜூ. ஆனாலும் தன்னாவின் தழும்புகளுக்கு முன் பிர்ஜூவின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரானது.
தன்னாவின் மேல் இவ்வளவு வெறுப்பும், பொறாமையும் பிர்ஜூவுக்கு உண்டாக, தன்னாவும் தான் காரணம். தன்னா கறியும் சோறும் சாப்பிடும்போது, பிர்ஜூ காய்ந்த ரொட்டித் துண்டை அதக்கிக் கொண்டிருப்பான். ரெண்டு கறித்துண்டுகளை பிர்ஜூவுக்குத் தரலாமெனவும் தன்னா எண்ணியதில்லை. அவன் ஒருவனே தான் சாப்பிடுவான். மது அருந்தும்போதும் அப்படித் தான். ஒரு மிடறு கூட தர மாட்டான். மதுவின் வாடையோ பிர்ஜீவை சுண்டி இழுக்கும். தன்னா இப்படி சுயநலமா இருப்பதால் தான் பிர்ஜூவின் மனசில் இவ்வளவு வெறுப்பும், பொறாமையும்.
பிர்ஜூ சில நேரங்களில் யோசிப்பதுண்டு. தன்னாவின் இந்த நோய் எவ்வளவு காலம் நீடித்துவிடப் போகிறது? இந்தக் கொப்பளங்களும், காயங்களும் நிலையானதா என்ன? என்றாவது ஒருநாள் இந்த நோய் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்? பிர்ஜீ தன்னாவிடம் இந்த நோய் பற்றி பலமுறை விசாரித்திருக்கிறான். அப்போதெல்லாம் , தனக்கு உடம்பில் எவ்விதமான வலியோ, வேதனையோ கிடையாது என்றே தன்னா கூறுவான். இது ஒருவிதமான தொற்று நோய். தொட்டால் ஒட்டிக்கொள்ளும். கோயிலைச் சுற்றி வீடுகள் எதுவும் இல்லாததால் இந்த நோய் பரவும் அபாயம் இல்லை என்பான் தன்னா. வாழ்நாள் முழுவதும் இந்த நோயோடுதான் தன்னா இருப்பான் என்பதை நினைக்கும்போது பிர்ஜூவுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. வேறு இடத்திற்குப் போய் விடலாமா என்றுகூட பிர்ஜீ யோசித்தான். நகரத்தைத் தாண்டி இருப்பதால் தான் இங்கே பிச்சைக்காரர்கள் கூட்டம் மொய்ப்பதில்லை. வேறு இடங்களில் போட்டி அதிகமாக இருக்கும். இங்கே தன்னாவைத் தவிர போட்டிக்கு யாருமில்லை. அதனால், வேறு இடம் தேடும் முடிவைக் கைவிட்டான்.
ஒருநாள் இரவு முழுதும் பிர்ஜீக்கு தூக்கமே வரவில்லை. எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்ததில் விடிந்தேவிட்டது. அந்த விடியல் பிர்ஜூவுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுப்பதாக இருந்தது. இன்னமும் தன்னா தூங்கிக்கொண்டிருந்தான. சுள்ளிகள் எரித்து தேநீர் தயாரித்தான் பிர்ஜூ. தன்னா எழுந்ததும் தேநீர் டம்ளரை அவனிடம் நீட்டினான். தன்னாவுக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எதுவும் பேசாமல் தேநீர் அருந்தினான் தன்னா. அன்றிலிருந்து பிர்ஜூ தன்னாவிடம் நெருங்கிப் பழகத் தொடங்கினான். அவனோடு சேர்ந்தே சாப்பிட்டான். இரவிலும் வெகு நேரம் வரை தன்னாவோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு தன்னாவின் கம்பளி விரிப்பிலேயே உறங்கிவிடுவான். “ அடடே, உன் காயத்திலிருந்து இரத்தம் வருது பார். கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்துவிடுகிறேன் வா” என்று தன்னாவுக்கு பணிவிடைகளும் செய்தான்.
”வேண்டாம் பிர்ஜீ..இது தொற்று வியாதி. உனக்கும் ஒட்டிக்கொள்ளும்” என்று தன்னா மறுத்தாலும், பிர்ஜீ காயங்களைச் சுத்தம் செய்து எண்ணெய் வைத்துவிடுவான். கொஞ்சமும் தயங்காமல் காயங்கள் துடைத்த தன் கைகளைத் தனது வேட்டியிலேயே துடைத்துக்கொள்வான்..
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் பிர்ஜீ பழகுவதை தன்னாவால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இனி சாப்பிடும்போது பிர்ஜூவுக்கும் கொடுத்துவிட்டுச் சாப்பிடுவது என நினைத்தான் தன்னா. ஆனாலும், நினைத்ததோடு சரி.. பிர்ஜூவோ எவ்வித மாற்றமுமில்லாமல் சகஜமாகவே தன்னாவுடன் பழகினான்.
ஒருநாள் காலை தூங்கியெழுந்த பிர்ஜூவின் பாதங்களில் ஏதோ ஊர்வதுபோல இருந்தது. பூச்சி புழு ஏதேனும் ஊர்கிறதா என தடாலென எழுந்து வேட்டியை உதறிப் பார்த்தான். எதுவும் தட்டுப்படவில்லை. ஆனால், அவனது இடுப்பில் சின்னச் சின்னதாய் சிவந்த கொப்பளங்கள் தென்பட்டன. உடனே அவன் தன்னாவை எழுப்பினான். எழுந்து உட்கார்ந்த தன்னா அந்தக் கொப்பளங்களைப் பார்த்ததும்,” சொன்னேனே கேட்டியா? உனக்கும் வந்துவிட்டது இந்த வியாதி. என் கிட்ட வராதேன்னு எத்தனை முறை சொன்னேன்? என் காயங்களைத் தொடாதேன்னு சொன்னேன்…கேட்டியா நீ? இப்ப பாரு…..” என்று கத்தினான் தன்னா.
“ உனக்கும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்ததா தன்னா?” என்று கேட்டான் பிர்ஜீ.
அந்தக் கொப்பளங்களைக் கூர்ந்து பார்த்த தன்னா,” ஆமாம்… இதே மாதிரிதான் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தது” என்றான் தன்னா.
பிர்ஜூ எதுவும் பேசவில்லை. அமைதியாக எழுந்து கோயிலை நோக்கி நடந்தான். கோயிலுக்குள் சென்று தன் வேட்டி முனையில் முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தை கடவுள் சிலைக்கு முன் வைத்துவிட்டு கைகள் கூப்பி, தளுதளுத்த குரலில்,” கடவுளே, என் மேல் இரக்கம் காட்டியதற்கு நன்றி. என் வேண்டுகோளை ஏற்று எனக்கும் இந்த வியாதியைக் கொடுத்து என் மேல் கிருபை காட்டிவிட்டாய் கடவுளே. இன்னும் சில நாள்களில் என் உடம்பும், தன்னாவின் உடம்பைப் போல் ஆகிவிடும். கோயிலுக்கு வருவோர் இனி என்னைக் கண்டும் பரிதாபப் படுவார்கள். என் அலுமினியத் தட்டும் இனி நிறையும்…….” மேற்கொண்டு பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது பிர்ஜீவுக்கு. பிர்ஜூ ரொம்பவும் சந்தோசமாக இருந்தான்

கடிகார முள்

கடிகாரத்தில் 
குத்தியிருந்த 
முட்களை 
பிடிங்கிப் போட்டுவிட்டேன்
காலத்தின் காயம் 
ஆறிக்கொண்டிருக்கிறது.
மே27 2013
--------
 
நான் தொலைந்துதான் 
போய்விட்டேன் போல. 
வீட்டையே சல்லடையாக்கி 
அலசிய பின்னும் 
அகப்படவில்லை மூக்குக்கண்ணாடி. 
முதலில் என்னைத் தான் தேட வேண்டும் 
யாருக்கும் தெரியாமல் 
எனக்கும் தெரியாமல்
மார்ச் 29

சேகர்

சுழலும் மின்விசிறிக்குக் கீழே
நீயும், நானும் 
சொற்களைப் பிசைந்துகொண்டிருக்கிறோம்
காற்றை அனுபவிக்க 
நமக்கெங்கே தெரியும்?
மே27 2013
----------
 
நான் கோணப்புளியங்காய் 
என்பேன். 
நீயோ கொடுக்காப்புளி 
என்கிறாய். 
என்ன செய்வது? 
நான் கோணப்புளியங்காய் 
சாப்பிட்டுப் பழகியவன். 
நீயோ கொடுக்காப்புளி 
சாப்பிட்டுப் பழகியவன்
மே27
----------
 
வெயிலை, வெயிலே 
என்று கூப்பிட்டு அலுத்துவிட்டது. 
சேகரே எனக் கூப்பிடலாம் இனி. 
சேகர் கோபம்கொள்வானே? 
அவனை இனி 
வெயில் எனக் கூப்பிடலாம்
மே 27
-------
 
அதற்கு முன்னும்
அதற்குப் பின்னும் 
இயல்பாகத்தான் இருந்தேன்
 யாரோ தொட்டுவிட்டதற்காக 
சுருங்கிக் கிடக்கும் 
இதையா வாழ்க்கை 
என்று சொல்வது?
மே 27
நான் மதுக்கோப்பையின் 
நிழலில்
நிரம்பி நிரம்பி
காலியாகிக்கொண்டிருக்கிறேன்
மே 30 2013
-------
ஞாபகக் கழுதையை 
எட்டியுதைத்து 
விரட்டியாயிற்று
எங்கிருந்தோ அது
காகிதம் தின்னப் பழகிவிட்டிருந்தது
மே 30
---------
 அவரைப் பற்றி 
அவரில்லாதபோது 
கதைத்தலாகாது
அவர் செத்துவிட்டவரெனில் 
இன்னும் உனக்கு சுலபம்
அவரை நினைத்தலாகாது
மே 30 

தற்கொலை

சருகாகி வானேகும் சிறுபறவை
அதே கணம்
பறவையாகி நிலம் நாடும் 
ஒரு சருகு
அந்நொடி நானோ 
மரம்..மரம்
மே 31 2013
-------
ஒவ்வொரு முத்தமாய் 
பொறுக்கி வீசுகிறாய். 
குளமாகி 
அலையலையாய் 
விரிந்தபடி நான்
மே 30
------ 
 அவ்வளவு 
சுருக்கமான செய்தியாகிவிடும் 
அபாயமிருப்பதால் 
யாருக்கும் காட்டாமல் 
ஒளித்து வைத்திருக்கிறேன் 
எனது தற்கொலையை

நானும்

போட்டது போட்டபடியிருக்கிறது 
வீடு. அழுக்குச்சட்டை.. 
நகர்த்திய நாற்காலி.. 
கசடுதங்கிய தேநீர்க்கோப்பை.. 
அப்புறம் நானும்
--------
எல்லாம் மேகம் 
என்றாகிவிட்டது. 
இப்போதைக்கு
வானம் என்பதில்லை
வானத்தில்
---------
குடை விரிக்கும் 
சடங்கில் சிக்கியிருக்கிறேன் 
மௌனம் பொழியும் 
திரள் மேகங்களோடு 
நீ 
அரிசியில் கல் பொறுக்கும் 
உன்னையும்
உன் கண்களையும் ஏமாற்றி
உன் பற்களுக்கு வரும்
ஏதோவொரு கல்
உனக்கென்னை 
ஞாபகப்படுத்தும்
-------
நான் நிற்கிறேன்
படுத்திருக்கிறது என் நிழல்
அரூபக் கோடாக 
நீளும் என் பார்வை
90 டிகிரியில் 
ஒரு முக்கோணத்தை 
வரைகிறது பாருங்கள்
ஜீன் 8 2013 
---------
முதலில் 
ஓடிவந்து விசாரித்தது 
கண்ணீர்தான்
அப்புறம் தான் 
நீ 
-------
சுட்டு வீழ்த்திய பறவையோ
மரம் உதிர்த்த மலரோ காண்பாயாக
நூலறுந்த நொடியில்
ஜீன் 2 2013

நினைவுச் சட்டை

நினைவு 
உரித்துப்போட்ட சட்டை
 மனக்கிளையில் அசைகிறது.
பார்க்க பயமாயிருக்கிறது
அதுவே.
------
தண்டவாளங்களாகத் தடதடக்கின்றன
இரண்டு கண்களும். 
தூரத்தில் கூடிக்குவியும் புள்ளியை 
 பார்வையெனும்போது, 
அங்கே ஒரு இரயில் 
கூவிச் செல்கிறது
--------
தாழப் பறந்து
தட்டான் தலை மோத
நடுங்கும் குளம்.