திங்கள், 10 மார்ச், 2014

படரும் வெளி

கொடியெனப் படர்ந்திருக்கும்
தனிமையின் இலைகளில்
எறும்புகள் ஊர்வது
அதிசயமில்லை
 
பற்றிக்கொள்ள
என்னைத் தவிர எதுவுமில்லை
என்றான பின்
பின்னிப் பிணைத்துக்கொள்ளும் பேரன்பு
சுரந்து வழிகிறது பகல் முழுதும்
இரவிலும் கூட....

விரிந்த கிளைகளில்
மலர்ந்த கூடுகளில்
குஞ்சுகளின் கிசுகிசுப்புகளும்
அந்தியில் பறவைகளின்
கீச்சொலிகளும்
வானத்தைக் குளிப்பாட்டுகின்றன

நகர்தலை சாத்தியமற்றதாக்கிவிட்ட
வேர்கள்
நகர்தல் அர்த்தமற்றதெனவும்
சொல்லிக் கொண்டிருக்கின்றன




உன் முத்தமானாலும்
அது உனக்கீடானதில்லை
என்பதான
ஒரு மழைத்துளி
உன் கடைசி நேர
கையசைப்பிலிருந்து
பொழிந்தபடியிருக்கிறது

ஞாயிறு, 9 மார்ச், 2014

அஃதில்லை அது

()()()()() அஃதில்லை அது ()()()()()

ஒரு ஞாபகம்
ஏழு வண்ணங்களோடு
வளைந்திருந்தது

ஒரு ஞாபகம்
சின்னச் சின்னத் துளிகளாகப்
பொழிந்தது

ஒரு ஞாபகம்
வயற்காட்டுக் குருவிகளை
பயமுறுத்தியது

ஒரு ஞாபகம்
வெறி பிடித்துக்
கடிக்கத் துரத்தியது

ஒரு ஞாபகம்
நடுநிசியில்
பாத்திரங்களை உருட்டியது

ஒரு ஞாபகம்
புல் நுனியில்
உட்கார்ந்திருந்தது

ஒரு ஞாபகம்
தவளையின் கூக்குரலுக்கு
வளைந்து வளைந்து ஊர்ந்து சென்றது

ஒரு ஞாபகம்
உதிரும் சருகிலைக்கு
இறுதி வணக்கம் செலுத்தியது

ஒரு ஞாபகம்
ஞாபகத்தின் ஊரிலிருந்து
வெளியேறியது

குளிரின் மரணம்

()()()()() குளிரின் மரணம் ()()()()()

ஏ.ஸி ரிப்பேர் செய்பவனாக
இன்றைய நாளை
வாழ்ந்து முடித்துவிட்டேன்

குளிர், மழை, பனி பற்றிய
எந்தப் பேச்சும்
இன்றெனக்கு
பெரும் வெக்கையாக இருந்தது

தர்பூசணிப் பழங்கள் அறுத்து
துண்டாடிச் சிவந்த
பகலைக் கண்டு
வெட்கிப்போனேன்

வீதியில் மணியெழுப்பிப் போன
ஐஸ்காரன்
கொல்லப்படாமல்
என்னிடமிருந்து தப்பிப் போனான்

நீ நெருக்கித் தைத்துக் கொடுத்த
ஸ்வெட்டருக்குள்
ஒளிந்திருந்த காதலை
அணிந்துகொள்ள
முடியாமலாயிற்று

குடை விரிக்கும் பதைபதைப்பென
எதுவுமில்லாததையெண்ணி
மிகவும் பதைபதைத்துப் போனேன்

அவ்வளவு எளிதாக
தேநீர் மறுத்து
வியப்பிலாழ்ந்தேன்
என்னை நானே

நெற்றி வழிந்த வியர்வையை
விரல் வழித்து
சுண்டிவிட்டபோது
சில்லிட்டிருந்தது
அந்த அறை

பைன் ஆப்பிள் என்னும் அவன்

)()()()() பைன் ஆப்பிள் எனும் அவன் ()()()()()

நீங்கள் அவனுக்கு
பைன் ஆப்பிள் எனப் பெயர் சூட்டி
பைனாப்பிள் என விளித்ததும்
பைன் ஆப்பிள் ஆகி விடுகிறான் அவன்

உங்களின் குரல் திசை வழியில் நடந்து
உங்களை வந்தடையும் போது
அவன்
அழுகிப்போவதிலிருந்து
தப்பித்துக் கொள்கிறான்

காற்றின் பெருவெளியில்
அதிகாரத்தின் கூர்மை பூசிய
ஒரு சொல்லைக் கொண்டு
அவனது சொரசொரப்பான மேல்த்தோலைச்
சீவி விடுகிறீர்கள் நீங்கள்

இப்போது
மஞ்சள் நிறச் சாம்பலாக
இருக்கும் அவன்
உண்ணத் தகுந்தவனாகிறான்
உங்களுக்கு

வட்டமாக அல்லது நெட்டையாக
உங்கள் விருப்பப்படி
அவனைக்
கூறு போட்டுக் கொள்கிறீர்கள்

துண்டுகளாகிவிட்ட
அவன் மேல்
மிளகாய்ப் பொடியைத் தடவும்போது
உங்கள் நாவில்
எச்சில் சுரப்பதைத் தடுக்கவே முடியாது

சாறு வழிய
அவனைத் தின்று தீர்த்தபடி
உங்கள் பயணத்தைத் தொடர்கிறீர்கள்

நீங்கள் நுகராதபோதும்
கழுவிக்கொண்ட
உங்கள் கைகளிலிருந்து
வாசனையாய்க் கசிந்துகொண்டிருக்கிறான்
பைன் ஆப்பிள் என்னும் அவன்
()()()()() பிதுக்கப்படாத பற்பசை ()()()()()

என்
ஜன்னல் கிராதியில்
நீ மறந்து வைத்துவிட்டுப்போன
நினைவொன்று உட்கார்ந்திருக்கிறது

ஆயிமாயிரமாய் முளைத்திருக்கிற
அதன் பற்கள் யாவும்
பாதிக்குமேல் தேய்ந்து போயிருக்கின்றன

இவ்வளவு நாளாக அது
உன் அழுக்குகளைக் கொப்பளித்துத் துப்ப
பேருதவியாக இருந்திருக்கக் கூடும்

மறுபடியும் நீ அழுக்கேறியதை
உணர்ந்த கணத்தில்
நினைவுக்குத் திரும்பி
உனதறைகளில் தேடியிருப்பாய்
இந்த நினைவை

ஒரு குறுஞ்செய்தியில் நான்
உனக்கு உறுதிபடுத்திவிட்டேன்
இந்த நினைவைப்பற்றியும்,
அது என் ஜன்னல் கிராதியில்
உட்கார்ந்திருக்கும் அழகுபற்றியும்..

மறுமுறை நீ
வரும்வரை அழுக்குகளின் கனவின்
பசித்திருக்கும் அதை
பத்திரப்படுத்தி வைக்கும்
பெரும் பொறுப்பில்
அழுக்காகிக் கொண்டிருக்கிறேன்
இப்போது நான்

பிப்  22 2014

சருகுகளின் மலை

()()()()() சருகுகளின் மலை ()()()()()

சென்ற முறை
உனக்குள் நான் பயணப்பட்டபோது
இவ்வளவு சருகுகள் இருக்கவில்லை

உனக்கென கருகொண்டு
என் தோளுரசி கொஞ்சிப் போன
மேகத்தின்
வெவ்வேறு முகங்களில்
ஒன்று கூட தென்படவில்லை
இப்போது

சோம்பல் மிகுதியில்
இணையின் தலை கோதி
கூடிக் களித்த மந்திகள்
உன் பிளந்த நிலத்தில்
ஒரு சோற்றுப் பொட்டலத்திற்காய்
ஓடிக்கொண்டிருக்கின்றன

கூடுகள் தெரியுமளவிற்கு
வற்றிப்போன வேங்கை மரத்தின்
அடிவேரில்
என் இளைப்பாறுதல்
தாகத்தின் நிழலற்று பரிதவிக்கிறது

ஒலிகளால் உன்னை நிரப்பிய பறவைகளின்
மெல்லிறகுகள்
காற்று வெளியில் பறந்து திரிவதைக் கண்ணுற்று
சர்க்கஸ் கூடார கைத்தட்டல்களைச் சிந்துகிற
வெடித்த மனம் வாய்க்கவில்லை
எனக்கின்னும்

கீழிருந்து கொண்டுவந்த
தண்ணீர் பாட்டிலின் மூடி திறந்து
மேலிருக்கும் உன் பூமியில் கொட்டும்போது
உண்டாகும் இவ்வோசையைக் கேட்டு
ஏமாந்துவிடாதே

இது மழையில்லை

காதல்

இந்த வெளிச்சம் 
உன் மீதான காதலை
நிறைவேறாத அன்பை
தெளிவான நேசத்தை
சின்னஞ்சிறு பிரியத்தை
எங்கும் பரவிய 
இருளென காட்சிப்படுத்துகிறது
ஜன் 15 2014
-------

நீ 
கடிதமெழுதியிருக்கிறாய் எனக்கு. 
அது காதலை சுமந்து வந்திருக்கிறது. 
எழுத்துகள் யாவும் 
முத்தங்களாயிருக்கின்றன.
இப்படிக்கு எனுமிடத்தில் நீ இருந்தாய். 
அன்புள்ள எனுமிடத்தில் நானிருந்தேன்.
முகவரி எழுதுமிடத்தில் 
அரசாங்க முத்திரையிருந்தது. 
கடிதமோ கிழிந்திருக்கிறது.
ஜன் 6 2014
-----------
 தொங்கும் 
தண்டவாளத் துண்டு 
மணியொலிக்க, 
ஆரவாரமாகிற ஓர் அந்தி, 
உன்னைப்போலவே இருக்கிறது