நீண்ட இரவு
ஒரியா மொழி மூலம்: சந்திரசேகர் ரத்
இந்தியில்: சுஜாதா சிவேன்
தமிழில்: நாணற்காடன்
ஆனால் ஓர் இரவுக்குள் என்ன இதெல்லாம்? எவ்வளவு பரிதாபத்துக்குரியவன் இந்த ராஜீ. அவன் வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் இந்தப் போர் ஆரம்பித்துவிட்டது போலும். டாக்டர், மருந்து, ஊசி என இரவு முழுக்க துக்கமும், வலியும் அடுக்கடுக்காய்க் குவிந்திருக்கும். விடிந்ததும் சின்னக் கூண்டைத் திறந்துகொண்டு பறவை பறந்துவிட்டது போலிருக்கிறது.
ஒரியா மொழி மூலம்: சந்திரசேகர் ரத்
இந்தியில்: சுஜாதா சிவேன்
தமிழில்: நாணற்காடன்
அன்று காலையிலேயே அவனைப் பார்த்தேன். அவனது முகம் வியர்வையாலும், கண்ணீராலும் நனைந்திருந்தது. கண்களைச் சுற்றிலும் கருவளையம் பூத்திருந்தது. காவித்துண்டைப் போர்த்திக் கொண்டிருந்தான். உடலெங்கும் அழுக்கும், மண்ணும் அப்பியிருந்தன. வயிறும், முதுகும் ஒன்றாக ஒட்டியிருந்தன. அவனது வீட்டுக்குள்ளிருந்து அழுகுரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
யாரோ ஒருவர் குழந்தையைத் துணியில் சுற்றி தோளில் போட்டுக்கொண்டு வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்தபடி மேலும் இரண்டு பேர் வந்தனர். அவன் சுவரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
அவன் என்னைப் பார்த்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த நேரத்தில் அவனிடம் போய் எதுவும் விசாரிக்கும் துணிச்சல் எனக்கு ஏற்படவில்லை.
காலை நடைப்பயிற்சி முடிந்து திரும்பிக்கொண்டிருந்தேன். நான் தினமும் இந்த நேரத்தில் இதே பாதையில் தான் திரும்பி வருவேன். பெரும்பாலான நாட்களில் அவனைச் சந்தித்ததில்லை. ஆனால் இன்று இப்படியொரு சூழ்நிலையில் அவனைச் சந்திப்பேனென நினைக்கவில்லை. ஏனெனில், ராஜூ நேற்று மாலை தான் என்னை வண்டியில் கொண்டுவந்து வீட்டில் விட்டுவிட்டுச் சென்றான்.
கேந்துஜரிலிருந்து ஜோடா வரைக்கும் என்னை அழைத்துப் போய்விட்டு மறுபடியும் அங்கிருந்து திரும்ப அழைத்துவந்தான். அங்கிருந்து திரும்பும்போது வண்டியின் மீட்டரை நிறுத்தி வைத்தான். முதலாளிக்குத் தெரியாமல் இப்படி அவன் கொஞ்சம் பணம் சம்பாதிப்பதுண்டு. அதுபற்றி நான் எதுவும் கேட்க மாட்டேன் என்பது அவனுக்கும் தெரியும். ஏனென்றால் வண்டிக்கு வாடகைக் கொடுக்கமாட்டேன் நான். கொடுத்தாலும் வாங்க மாட்டான். வண்டியில் ஏறும் மற்ற பயணிகளின் பணத்தில் சரி செய்துகொள்வான் அவன். ராஜூ வாடகைக் கார் (டேக்ஸி) ஓட்டுபவன். வெள்ளை அம்பாஸடர் டீசல் காரை முறைப்பட ஓட்டத்தெரிந்தவன். நான் எங்கு போக வேண்டுமென்றாலும் அவனைத் தான் அழைப்பேன்.
சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் அவன். அவனது வீட்டிற்குள்ளிருந்து அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு போய்க்கொண்டிருந்தனர் அவர்கள். நான் அமைதியாக அங்கிருந்து கிளம்பினேன்.
அன்று முழுவதும் என் மனத்திலும், மூளையிலும் ராஜீதான் நிழலாகப் படிந்து கிடந்தான். எங்கு பார்த்தாலும் வெற்றுடம்போடு சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த ராஜீவின் உருவம் தான் தென்பட்டது. அமைதியற்றுக் கிடந்தேன் நான். துக்கத்தில் கிடந்த ராஜுவுக்கு ஆறுதல்கூட சொல்லமுடியாமல் திரும்பி வந்துவிட்ட என்னை நினைத்து நொந்துகொண்டேன்.
ராஜுவிற்கு நாற்பது நாற்பத்தைந்து வயதிருக்கும். அவனது மகன் ஏதோ படித்திருக்கிறான். அவனை ஏதாவதொரு வேலையில் சேர்த்துவிடச்சொல்லி ராஜீ என்னிடம் கேட்டிருந்தான். அவனுக்கு மேலும் படிக்க விரும்பவில்லையாம். ராஜீவுக்கும் அவனை மேற்கொண்டுப் படிக்க வைக்க வசதியில்லை.
வழியில் சந்தையைப் பார்த்ததும் ராஜீ எனக்காக மலிவு விலையில் காய்கறிகள் வாங்கிக்கொடுத்தான். தனக்காக ஒரு பூசணிக்காயும் வாங்கிக்கொண்டான். பெரிய குடும்பம் அவனுடையது. உருளைக்கிழங்கு பூசணிக்காய் வாங்குவதற்கே அதிகச் செலவாகிறது எனச் சொன்னான் ராஜீ.
மேலும் அவன் தன் கடைசிப் பையனுக்கு உடம்பு சரியில்லை எனவும் சொன்னான். வண்டி ஓட்ட வராவிட்டால் ஏது பணம்? வீட்டிலேயேயிருந்து மகனைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை.
ஜோடாவுக்குச் செல்லும்போது எதுவும் பேசாமல்தான் வண்டி ஓட்டினான். குடும்பம், மகன்கள், பசி, தாகம், நோய் எனத் தீராத தன் வாழ்வின் துயரங்களையே நினைத்து ஆழ்ந்து கிடந்தான் அவன். நான் ஏதேனும் கேட்டால் சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிடுகிறான்.
அவன் மனசு சரியில்லாமலிருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டேன். துக்கத்துக்குள்ளேயே விட்டுவிட்டு வருவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.
ஜோடாவுக்குப் போய்ச் சேர்ந்ததும் நன்றாகச் சாப்பிட்டோம். அதன்பிறகுதான் அவன் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பினான். வீடு திரும்பப்போகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவனது முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி தென்பட்டதோ என்னவோ?
நகர எல்லையைத் தொடும்போது இருட்டாகிவிட்டது. என் வீட்டுக்கு முன் இறக்கிவிட்டுவிட்டு காய்கறிகளை எடுத்துக்கொடுத்தான். வணக்கம் சொல்லி விடைபெற அவசரம் காட்டினான். நானும் ஒரு நொடி கூட அவனைத் தடுத்து நிறுத்த விரும்பாமல் உடனே அனுப்பி வைத்தேன்.
ஆனால் ஓர் இரவுக்குள் என்ன இதெல்லாம்? எவ்வளவு பரிதாபத்துக்குரியவன் இந்த ராஜீ. அவன் வீட்டுக்குப் போய்ச் சேர்வதற்குள் இந்தப் போர் ஆரம்பித்துவிட்டது போலும். டாக்டர், மருந்து, ஊசி என இரவு முழுக்க துக்கமும், வலியும் அடுக்கடுக்காய்க் குவிந்திருக்கும். விடிந்ததும் சின்னக் கூண்டைத் திறந்துகொண்டு பறவை பறந்துவிட்டது போலிருக்கிறது.
ஐந்து மணி ஆனதுமே நான் ராஜீவின் வீட்டிற்கு முன் போய்ச் சேர்ந்தேன். பேண்ட் சர்ட் அணிந்துகொண்டு காவித்துண்டை தோளில் போட்டுக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினான் ராஜீ. இந்த மோசமான நாளில்கூட எங்கு கிளம்பிவிட்டான் இவன்? உயரமான அலைகளில் ஏறி இறங்கும் படகினைப்போல் அவனது கால்கள் தடுமாறிக்கொண்டிருந்தன. குடித்திருக்கிறான் போலும். உள்ளே எரிகின்ற நெருப்பை, குடித்து அணைக்க நினைக்கிறான்.
என்னைப் பார்த்ததும் திகைத்துப் போய் வணக்கம் செலுத்தி சிரிக்க முயன்றான். “எங்கேயாவது போக வேண்டுமா ஐயா” என்றான்.
”இந்த நிலைமையில் கிளம்பி வர முடியுமா உன்னால்” என்றேன்.
“ ஒண்ணும் பிரச்சினை இல்லை ஐயா.. ஸ்டியரிங் பிடித்து உட்கார்ந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.” என்றான் அவன்.
“ அதற்கில்லை.. இன்று உன்னுடைய மகன்.............” என்று இழுத்தேன் நான்.
“ ஓ.. அதையே நினைத்துக்கொண்டிருந்தால் என்ன செய்வது ஐயா.. அவனையே நினைத்து உட்கார்ந்துகொண்டிருந்தால் மீதி இருப்பவர்கள் சாப்பிட வேண்டாமா? துக்கத்தை அனுபவிக்கக் கூட எங்களைப் போன்ற மனிதர்களுக்கு நேரமிருக்கிறதா என்ன? நடந்தது நடந்துவிட்டது. முறைப்படி எதுவும் நடக்கவில்லை. இல்லையென்றால் அவனும் வளர்ந்து பெரியவனாகி வாழ்ந்திருப்பான். இரண்டரை வயசுப் பையன். அவன் பேசுவதைக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள். அழகான முகம் அவனுக்கு” சொல்லிவிட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டான் அவன். ஆழ்ந்த கனவும், ஏமாற்றமும் ராஜீவின் கண்களில் நிரம்பி வழிந்தன.
மறுபடியும் என்னைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான். “சரிங்கய்யா.. எங்க போகணும்.?” என்றான்.
“ இல்லையில்லை.. நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்” என்றேன் நான்.
அவனது உதடுகள் நடுங்கின. கண்களின் ஓரங்கள் சுருங்கிக் கொண்டன. உள்ளிருந்த அழுகையை மறைத்து வைக்க முடியவில்லை அவனால்.
அப்படியே நடக்கத் தொடங்கினோம் இருவரும்.
“ நீங்கள் ஸ்கூட்டர் கொண்டு வரவில்லையா?”
“ கொண்டு வந்தேன். அதன் விளக்கைச் சரி செய்வதற்காக கஜவாவிடம் விட்டிருக்கிறேன்”
“ என்னிடம் கொண்டு வந்திருக்கலாமில்லையா? நான் சரி செய்து கொடுத்திருப்பேனே? கஜவாவுக்கு என்ன தெரியும்?”
“ நேற்று என்னை ஜோடாவுக்கு அழைத்துச் செல்லாமல் இருந்திருந்தால் உன் மகன் இறந்திருக்க மாட்டான். நீ இங்கேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரவு முழுக்க என்ன செய்து கொண்டிருந்தாய். ஏன் எனக்குத் தகவல் தரவில்லை?”
“ என்ன செய்வது ஐயா..நான் விடிந்துதான் வீட்டிற்குச் சென்றேன். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.”
நான் கோபத்தில் திட்ட ஆரம்பித்துவிட்டேன். “ நீ எதுக்கும் லாயக்கில்லாதவன். வீட்டுல பையன் உடம்பு சரியில்லாம கிடக்கிறான். நீ சாராயக்கடைக்குப் போயிட்டயா? உன் முதலாளிக்குத் தெரியாம சம்பாதிக்கிறது இப்படி குடிச்சி அழிக்கத்தானா?”
அவன் என் கோபத்தைச் சகித்துக்கொண்டு, “ ஐயா உண்மையில் என்ன நடந்தது என்று கேளுங்கள்.”என்றான்.
“ என்ன கேட்கட்டும்..உளறு வாயனே.. ராத்திரி முழுக்க குடிச்சிட்டு அங்கேயே விழுந்திட்டயா?”
“ இல்லைங்கய்யா.. நேற்று இரவு நடந்ததைப்பற்றி எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது உங்களுக்கு?”
அதே கடுமையான குரலில், “ அப்படி என்ன தான் நடந்தது” என்று கேட்டேன்.
தலை குனிந்தவாறே பேசத் தொடங்கினான்.
“ நான் அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாததால்தான் இறந்துவிட்டான். உங்களை வீட்டில் விட்டுவிட்டுத் திரும்பும்போது அவனுக்கு திராட்சை, ஆப்பிள் கொஞ்சம் வாங்கலாமெனக் கடைவீதிக்குப் போனேன். அவன் முகம் என் கண்ணுக்குள்ளேயே இருந்தது. கீழ்வீதியில் போய்க்கொண்டிருந்தேன். திடீரென பிரேக் போட்டேன். ஒரு நெருப்பு உருண்டை என் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை உருண்டோடியது. ஏழெட்டு வயசுச் சிறுமி ஒருத்தி மயிரிழையில் உயிர் தப்பினாள். இல்லாவிட்டால் வண்டி அவள் மேல் ஏறியிருக்கும். பிறகு அவள் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் காதைப் பிடித்துத் திருகி அவளது அப்பா அம்மாவிடம் கொண்டு போய் விடவேண்டுமென்று கோபத்தோடு வண்டியை விட்டு இறங்கினேன்.
“ கார் கண்ணாடியை இறக்கிவிட்டு ரெண்டு திட்டு திட்டிவிட்டுப் போக வேண்டியது தானே,, உனக்கெதுக்கு இந்த நினைப்பு” என்றேன் நான்.
நான் சொன்னதைக் கண்டுகொள்ளாமல் மறுபடியும் பேசினான் ராஜீ. “ நான் கீழே இறங்கி..ஏ மடச்சாம்பிராணி! என்று கூப்பிட்டேன். அவள் மின்கம்பத்தருகே பயந்தவாறு நின்று கொண்டாள். நான் கோபத்தோடு அவளை நெருங்கும்போது தான் கவனித்தேன். அவள் அழுது கொண்டிருந்தாள். என்னைப்பார்த்து, என் அம்மா சாகக் கிடக்கிறாள்..என் வீட்டில் யாருமில்லை.. என்று சொல்லியபடி அழத்தொடங்கினாள்.
ஓங்கிய கையை நிறுத்திவிட்டு அப்படியே நின்றுவிட்டேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது ஒரு குள்ளமான கிழவி ஒருத்தி வந்தாள். பார்க்க என் அம்மாவைப் போலவே இருந்தாள். அவள் அந்தச் சிறுமியைப் பார்த்து, “ பதுவா தானே நீ..” என்றபடி என்னைப் பார்த்து “ ஏப்பா, கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாது..சரி சரி வா போகலாம்” என்றாள். அவள் பேச்சை என்னால் தட்ட முடியவில்லை. அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பதும் எனக்கு விளங்கவில்லை. அவர்களின் வீட்டைப் போய்ப் பார்த்தால் அதுவும் ஏழைமைத் தாண்டவமாடும் வீடு. பதுவாவின் அம்மா சுவரில் சாய்ந்தபடி கட்டில் மேல் உட்கார்ந்திருந்தாள். பெருமூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள். நீர் நிரம்பியக் குடத்தைப்போல தளும்பிக்கொண்டிருக்கும் கர்ப்பவதி அவள்.
அந்தக் கிழவி அவளது முகத்தில் நீர் தெளித்து தன் முந்தானையில் துடைத்துவிட்டாள்.
“ உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கிறார். வா போகலாம். நானும் உன்னோட வரேன். பதுவா..நீ தம்பியைப் பார்த்துகிட்டு இங்கேயே இரு. உன் அப்பா வந்தால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வை. மேல கடவுள் இருக்காரு. நம்மள பார்த்துக்குவாரு. பதுவா.. போய் விசியாவோட அம்மாவைக் கூட்டிட்டு வா. நான் தனியா இவளைக் கூட்டிட்டுப் போக முடியாது.” என்றாள் அந்தக் கிழவி.
என்னால் எதுவும் பேச முடியவில்லை. கடவுளுக்குத் தெரியும். கஷ்ட காலத்துக்கு யாரோட யார சேர்த்து வைக்கணும்னு.
அந்தக் கிழவியும், விசியாவோட அம்மாவும் எப்படியோ அவளைக் காரில் ஏற்றிவிட்டார்கள். பக்கத்தில் ஒரு துணி மூட்டையை வைத்துக்கொண்டு கிழவி அமர்ந்துகொண்டாள். விசியாவோட அம்மா அந்தப் பக்கமாக உட்கார்ந்துகொண்டாள். “ சீக்கிரம் போப்பா” என்றாள் கிழவி. ஆஸ்பிட்டலுக்குப் போய்ச் சேரும்போது மணி எட்டரை ஆகிவிட்டது.
எல்லோரையும் இறக்கிவிட்டுவிட்டுத் திரும்பிய போது அந்தக் கிழவி, “ ஆம்பளைங்க யாராச்சும் இருந்தா பரவால. கொஞ்சம் தைரியமா இருக்கும். ஏப்பா..இவளை எங்கே கொண்டு போகனும்னு கொஞ்சம் கேட்டுட்டு வாயேன்” என்றாள்.
எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. அந்தக் கிழவியின் நம்பிக்கையை அழிக்க மனம் வரவில்லை. வேறு வழியில்லை. டாக்டர்களையும், ஆஸ்பத்திரிப் பற்றியும் தான் உங்களுக்குத் தெரியுமே. காரில் வரும் நோயாளிகளைத்தான் அவர்கள் நன்றாக கவனிப்பார்களே! டாக்டரும், நர்சும் அவளை உள்ளே அழைத்து வரச் சொன்னார்கள்.
கிழவியும், விசியாவோட அம்மாவும் உதவி செய்ய நான் அவளை செக்கப்புக்கு அழைத்துப்போனேன்.
டாக்டர் பார்த்ததுமே, “ உடனே டெலிவரி ஆகிவிடும். உடனே ஊசி சலைன் எல்லாம் தேவைப்படும். ஆஸ்பிடல்ல இப்ப எல்லாம் தீர்ந்துவிட்டன. இந்த சீட்டில் இருப்பதை உடனே போய் வாங்கி வாங்க” என்றார்.
சொல்லிவிட்டு டாக்டரும், நர்சும் தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்தக் கிழவியோ, “ போப்பா.. என்ன பார்த்துக்கிட்டே நிற்கிற..சீக்கிரம் போய் வாங்கிட்டு வா..” என்றாள். விசித்திரமாக இருந்தது. அந்தச் சீட்டைக் கிழித்து அவர்கள் முகத்தில் வீசிவிட்டு வந்திருக்க முடியும். வழியில் பார்த்த என்னிடம் இவ்வளவு அதிகாரமா? பணம் எங்கிருந்து வரும்?
அதே சமயம் பதுவாவோட அம்மா என்னை நோக்கிப் பார்வையைப் பறக்க விட்டாள். “ என் அம்மா சாகக் கிடக்கிறாள்” என பதுவா அழுதது வேறு ஞாபகத்தில் வந்தது.
உடனே வண்டியைக் கிளப்பிக்கொண்டு கிளம்பினேன். இருநூறு ரூபாய்க்கும் அதிகமாக செலவானது. ஊசி மருந்து வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தேன். உள்ளே பிரசவம் நடந்து கொண்டிருந்தது. விட்டு விட்டு எப்படிச் செல்வது? வேறு ஏதேனும் தேவைப்பட்டால்? இங்கு வேறு யார் இருக்கிறார்கள்?
நான் வெற்றிலை அதக்கினேன். பீடி புகைத்தேன். வெளியில் பெஞ்சிலேயே உட்கார்ந்திருந்தேன். கடினமான சூழ்நிலை. வேறு என்ன செய்வது? சொல்லுங்க ஐயா?
நான் ராஜூவின் கண்களையேப் பார்த்தேன். வெற்றிலைக் கறை படிந்த பற்கள். பேசப் பேச அவனது கண்களில் ஒரு வித பரவசம்.
“ இரவு 12.10 க்கு ஆண் குழந்தை பிறந்தது. வெளியே வந்த நர்சு என்னைப் பார்த்து உங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது என சிரித்தபடியே சொன்னாள்.
அந்தக் கிழவி என்னிடம் வந்து, “ எல்லாம் நல்லபடி முடிந்துவிட்டது. பதுவா தனியாக இருப்பாள். பயந்து கொண்டிருப்பாள். வீட்டிற்குப் போகலாம். நானும் துணியெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும். மறுபடியும் காலையில் இங்கு வந்து விடுகிறேன்.” என்றாள்.
நான் எதுவும் பேசவில்லை. அந்தக் கிழவியை பதுவாவின் வீட்டுக்கு முன் இறக்கிவிட்டுவிட்டு வண்டியில் உட்கார்ந்தேன். “ மறுபடியும் எங்கே கிளம்பிவிட்டாய். வீட்டிற்கு வா” என்றாள் கிழவி.
” என் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றேன் நான்.
“ உன் வீட்டிற்கா? நீ பதுவாவோட சித்தப்பா தானே? பதுவாவின் வீட்டிலிருந்து உன்னை வரச்சொல்லி கடிதம் போட்டார்கள் தானே? உனக்குக் கடிதம் கிடைத்ததா இல்லையா? நீ பதுவாவோட சித்தப்பாவா இல்லையா?” என்று கேள்விகளை அடுக்கினாள் கிழவி.
“ இல்லையம்மா.. எனக்கும் பதுவாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் இந்தப் பாதையில் வண்டியை நிறுத்தி இருந்தேன். நீங்கள் தான் கூப்பிட்டீர்கள். உங்க வார்த்தையைத் தட்ட முடியவில்லை. அதனால் தான் வந்தேன். சரி நான் வருகிறேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
மின் கம்பத்தருகே கன்னத்தில் கை வைத்தபடி என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தக் கிழவி. நான் அப்போதே கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தால் 12.30 மணிக்கே வந்திருப்பேன். ஆனால் விதி விடவில்லை.”
“ வேறு என்ன பிரச்சினை வந்து சேர்ந்தது?” என்றேன்.
அது ஒரு தனி கதை. அந்தப் பாதையில் அரசாங்கத் தோட்டம் இருப்பதால் அந்தப் பாதையில் ரொம்ப நாட்களாக நான் போகாமல் தான் இருந்தேன். அதே பகுதியில்தான் என் சொந்தக்காரர் லக்ஷ்மணன் வசித்துவந்தார். அவர் வீட்டு முன் கூட்டமாக இருந்தது. போய்ப் பார்த்தால் அவர் இறந்துவிட்டார். பிணத்தை எடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நான் வண்டியை விட்டு இறங்கினேன். லக்ஷ்மணனின் மகன் சுதாமா என்னைப் பார்த்து “ அண்ணா” எனக் கட்டிக்கொண்டு அழத்தொடங்கிவிட்டான். நான் மறுபடியும் பிரச்சினையில் சிக்கிக்கொண்டேன்.
பிணத்தைத் தூக்க வேண்டும். நானும் தோள் கொடுத்தேன். சுடுகாட்டுக்குப் போய்ச் சேரும்போது மணி மூன்று ஆகிவிட்டது. எல்லாம் முடிந்து திரும்பி வரும்போது பொழுது விடியத் தொடங்கிவிட்டது. அப்புறம் தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வந்து பார்த்தால் எதுவும் மிஞ்சவில்லை.
பிணத்தைத் தூக்க வேண்டும். நானும் தோள் கொடுத்தேன். சுடுகாட்டுக்குப் போய்ச் சேரும்போது மணி மூன்று ஆகிவிட்டது. எல்லாம் முடிந்து திரும்பி வரும்போது பொழுது விடியத் தொடங்கிவிட்டது. அப்புறம் தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வந்து பார்த்தால் எதுவும் மிஞ்சவில்லை.
ராஜூ கீழேயே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். இவ்வளவு நீண்ட இரவை இப்படித்தான் கடந்து வரவேண்டுமா இவன்?
“ முதலாளிக்கு கணக்கு ஒப்படைத்துவிட்டு பார்த்தால் கையில் ஒன்றும் மிச்சமில்லை. சுடுகாட்டில் நூறு ரூபாய் செலவாகிவிட்டது. கைச் செலவுக்குக் காசு எதுவும் இல்லை” என்று முடித்தான் ராஜூ.
அவனது கண்களை நேருக்கு நேராய் என்னால் பார்க்க முடியவில்லை. தலை குனிந்து கொண்டேன்.
ராஜூவின் பாதங்களில் குற்றவாளியான கடவுள் துண்டுத் துண்டாக உடைந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது எனக்கு.